மார்த்தாள் மால்ட் Martha Mault
தென் தமிழகம் இன்று அறிவிலும், அரசியலிலும், கல்வியிலும் சிறந்து விளங்குகிறதென்றால், கடல் கடந்து வந்து அங்கு பணியாற்றிய மூத்த முன்னோடி ஊழியர்களே காரணம் என்றால் மிகையாகாது. அதிலும் குறிப்பாக, வீட்டிற்குள்ளேயே பூட்டிக் கிடந்த பெண்கள் இன்று சமுதாயத்தில் உயர்ந்திருப்பதற்கும் இவர்களே காரணம். 19-ஆம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மறுமலர்ச்சிக்கு இங்கிலாந்து தேசத்திலிருந்து வந்த சார்லஸ் மால்ட் மற்றும் அவரது மனைவி மார்த்தாள் மால்ட் பல காரியங்களைச் செய்தனர். 1818 - ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணமானது. திருமணமான ஒரு வாரத்திலேயே இருவரும் இந்திய தேசத்திற்கு சுவிசேஷத்தை சுமந்து கொண்டு வந்தனர். கடும் எதிர்ப்புகள் மத்தியிலும் தேவனுடைய பணியை தைரியமாக செய்து வந்தனர். தென் தமிழகத்தின் கால சூழ்நிலை மற்றும் கலாச்சாரம் அவர்களை அதிகம் பாதித்த போதும் கிறிஸ்துவுக்காக அனைத்தையும் சகித்தார்கள்.1821 - ஆம் ஆண்டு, முதல் அச்சுக்கூடத்தை நாகர்கோவிலில் நிறுவினார்கள்.
மார்த்தாள் மால்ட் பெண்கள் வாழ்வில் பெரிய திருப்புமுனையை கொண்டு வந்தார். பெண்களுக்கான முதல் போர்டிங் பள்ளிக்கூடத்தை நிறுவினார். கல்வியறிவு இல்லாத பெண் பிள்ளைகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட பெண்களை முன்னேற்ற போராடினார். ஏனென்றால் தென்திருவிதாங்கூரில் பெண்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தனர். இப்பள்ளிக்கூடத்தை நடத்த போதுமான நிதி இல்லாததால் அதிக கஷ்டப்பட்டார். மார்த்தாள் மால்ட் இங்கிலாந்தில் இருந்த தன் நண்பர்களுக்கு இப்பெண்களின் நிலையைப் பற்றியும், பொருளாதார தேவையைப் பற்றியும் கடிதம் எழுதி அனுப்பினார். தேவனுடைய அளவற்ற கிருபையால் அங்கிருந்து கிடைக்கப் பெற்ற பணத்தைக் கொண்டு பெண்கள் பள்ளியை சிறப்பாக நடத்தினார். இதனால் பெண்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இப்பள்ளியில் படித்த பிள்ளைகள் பெற்றோர் இல்லாத அனாதைகளாகவும், அடிமைகளாக இருந்த பிள்ளைகளுமே. மார்த்தாள் மால்ட் இப்பிள்ளைகள் மீது தன் அன்பையும், பாசத்தையும் காட்டி கிறிஸ்துவுக்குள் அவர்களை வழிநடத்தி வந்தார். இவர்களுக்கு கல்வி கற்பிக்க, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஆசிரியர்களை நியமித்தார். இன்றும் இப்பள்ளி டத்தி (Duthie) பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக நாகர்கோவிலில் இயங்கி வருகிறது. கல்வி ஒன்றே பிள்ளைகளை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர முடியும் என்று அறிந்த மார்த்தாள் மால்ட், அக்கல்விக்காக பல பாடுகளையும், போராட்டத்தையும் சந்தித்தார். இருந்தபோதிலும் அதற்கான பதிலை தேவன் கொடுத்தார். கன்னியாகுமரி மட்டுமல்லாது பல பகுதிகளிலும் பெண்கள் பள்ளியை நிறுவினார். கல்வி மட்டுமல்லாது லேஸ் பின்னலையும் (Lace Making) பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தார். இதற்கான பல உபகரணங்களை இங்கிலாந்திலிருந்து கொண்டுவந்து அறிமுகம் செய்தார். இப்பெண்களின் தயாரிப்புகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மூலம் பெண்கள் சுயமாக பணம் சம்பாதிக்க ஆரம்பித்தனர். கணவனை இழந்த பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களின் வாழ்வில் இத்தொழில் மிகவும் உதவியாக இருந்தது. நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கைத் தரம் இதன் மூலம் உயர்ந்தது.
இது மட்டுமின்றி, தன் கணவனின் உதவியோடு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 26 கிராமங்களில் பெண் பிள்ளைகளுக்கு கல்வி வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். இதில் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாத பிள்ளைகளும் சேர்ந்து படித்து பயன் பெற்றனர். தேவன் இத்தம்பதியினருக்கு ஐந்து பிள்ளைகளைக் கொடுத்த ஆசீர்வதித்தார். மூன்று ஆண் பிள்ளைகளும் இங்கிலாந்திற்கு குடி பெயர்ந்தனர். மற்ற இரண்டு பிள்ளைகளான சாராள் மற்றும் எலைசா இருவரும் தங்கள் தாயார் செய்த ஊழியத்தில் தோள் கொடுத்து உதவி வந்தனர். இருவரும் சரளமாக தமிழ் மொழியில் பேச பழகினார்கள்.
1849 - ஆம் ஆண்டு சாராள் ஜோ என்பவரை திருமணம் செய்தார். மூன்று ஆண்டுகள் தன் பெற்றோருடன் கணவன் மனைவியாக இருவரும் ஊழியம் செய்தனர். அவரது கணவர் ஜோவிற்கு கன்னியாகுமரி காலசூழ்நிலை ஒத்துக் கொள்ளாததால் இங்கிலாந்திற்கு திரும்பி சென்றனர். 1844 - ஆம் ஆண்டு எலைசா மால்ட், இடையன்குடியில் பணியாற்றி வந்த பேராயர் இராபர்ட் கால்டுவெலைத் திருமணம் செய்தார். தான் வளர்ந்து வந்த நாகர்கோவிலிலிருந்து 40 மைல் தொலைவில் இருந்த இடையன்குடிக்குச் சென்ற எலைசா, தன் கணவருடன் இணைந்து தேவ பணியை இடையன்குடியில் செய்து வந்தார். அவரைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
போதகர் சார்லஸ் மால்ட் மற்றும் அவரது மனைவி மார்த்தாள் மால்ட் இருவரும் 35 ஆண்டுகள் தென்திருவிதாங்கூர் மண்ணில் ஊழியம் செய்தனர். ஒருமுறை கூட தன் தாய் நாட்டிற்குத் திரும்பிச் செல்லவில்லை. கலப்பையில் கை வைத்து விட்டு பின் திரும்பாத இக்குடும்பத்தைக் கொண்டு தேவன் பெரிய காரியங்களைச் செய்தார். இருவரும் தங்கள் பணிக்காலம் முடிவடைந்து ஓய்வு பெற்ற பின் இங்கிலாந்து தேசத்திற்கு சென்றனர். 1858 - ஆம் ஆண்டு சார்லஸ் மால்ட்டும், 1870 - ஆம் ஆண்டு மார்த்தாள் மால்ட் இருவரும் தேவ இராஜ்ஜியம் சென்றடைந்தார்கள். இன்று பெண்கள் வெளி உலகிற்கு அடையாளம் காட்டப்படுகிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் மார்த்தாள் மால்ட். இவரைத் தொடர்ந்து அடுத்த மூன்று பெண் தலைமுறையினர் தென் தமிழகத்தில் ஊழியம் செய்துள்ளனர். சரித்திரத்தில் இதுவரை எந்த குடும்பத்திலிருந்தும் பெண்கள் தலைமுறை தலைமுறையாக தேவனுடைய ஊழியத்தை செய்ததாக கூறப்படவில்லை.
இதனை வாசிக்கும் அன்பர்களே, இன்று நம் தலைமுறையினர் எப்படி வாழ்கிறார்கள்? யாரை சேவிக்கிறார்கள்? என்று சிந்தித்துப் பார்ப்போம்.
"ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி எனப்படும்" சங்கீதம் 22:30
Praise the Lord for sending such a gift to us. All glory be to Him
ReplyDelete