Donald Andenson McGavran டொனால்ட் மெக்காவரன்



மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் உண்டு. அவைகள் நிறைவேற சிலர் கடினமாக உழைக்கிறார்கள். சிலர் கனவுகள் கண்டே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்.
       சுவிசேஷகர் டொனால்ட் ஆண்டர்சன் மெக்காவரன் அவருக்கு வித்யாசமான ஆசை இருந்தது. வட இந்தியாவில் கூட்ட நெரிசலாக இருக்கும் பாசஞ்சர் ரயிலில் ஒரு நாள் பயணம் செய்ய வேண்டும். அப்போது இதய நோயால் பாதிக்கப்பட்டு மரிக்க வேண்டும். அவ்வழியில் உள்ள கிராமத்திலேயே தன் உடலும் அடக்கம் செய்யப்பட வேண்டும். இதுதான் அவரது ஆசை. வித்தியாசமாக இருக்கிறதல்லவா? தொடர்ந்து வாசியுங்கள். 
       டொனால்ட் மெக்காவரன் மூன்றாம் தலைமுறை கிறிஸ்தவ மிஷனெரியாக வாழ்ந்தவர். 1897 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தாமோ என்ற ஊரில் மிஷனெரி பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது பெற்றோர் ஜான் மெகாவரன் - ஹெலன் அமெரிக்கா தேசத்திலிருந்து இந்தியாவிற்கு மிஷனெரிகளாக வந்தவர்கள். இந்தியாவில் ஆரம்ப கல்வியைக் கற்ற மெக்காவரன், தன் மேற்படிப்புகளை அமெரிக்காவில் பயின்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று சிறந்து விளங்கியதோடு, தன் பெற்றோர் காட்டிய கிறிஸ்தவ அடித்தளத்திலும் காலூன்றி நின்று, அவர்கள் பின்பற்றிய கிறிஸ்துவை இவரும் பின்பற்றி வாழ்ந்தார். 
       என்றாலும் வாழ்க்கையில் சற்று தடுமாற்றம் ஆரம்பமானது. என் பெற்றோர்கள் ஊழியத்தை சிறப்பாக செய்து வருகின்றனர். ஆகவே நான் பணம் சம்பாதிக்க வேண்டுமென தீர்மானம் செய்தார். ஆனால் 1919 - ஆம் ஆண்டு ஜெனிவா ஏரிப்பகுதியில் நடைபெற்ற ஒரு கூடுகையில் கலந்துகொண்டு தேவனிடத்தில் தன்னை அர்ப்பணித்தார். தேவன் தன் வாழ்க்கையை பொறுப்பெடுத்து நடத்த ஒப்புக் கொடுத்தார். அவர் காட்டும் பாதையில் செல்ல தன்னை ஆயத்தப்படுத்தினார். இந்த அர்ப்பணிப்பு, மத்திய பிரதேசத்திலிருந்த அவரை பல நாடுகளுக்கு அழைத்துச் சென்றது. 1922 - ஆம் ஆண்டு மேரி எலிசபெத் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இருவரும் தங்களை தேவ பணி செய்ய அர்ப்பணித்தனர். 1923 - ஆம் ஆண்டு Christian church என்ற சபையாரால் முழு நேர மிஷனெரிகளாக பிரதிஷ்டை செய்யப்பட்டனர். இருவரும் இந்தியாவில் சுமார் 30 ஆண்டுகள் தேவனுடைய பணியை செய்தனர். இவற்றில் பாதி ஆண்டுகள் சட்டீஸ்கர் மற்றும் மத்திய இந்தியாவில் திருச்சபை நிறுவும் பணியை திறம்படச் செய்தனர். சட்டீஸ்கரில் ஹிந்தி பேசும் மக்கள் மத்தியில் பள்ளிகளை ஆரம்பித்து கல்வி, சுவிசேஷம், திருச்சபை நிறுவுதல், சுவிசேஷ புத்தகங்களை மொழி பெயர்த்தல் போன்ற அநேக பணிகளை செய்தனர். 
       திருச்சபையின் வளர்ச்சியை குறித்த பாரத்தை தேவன் இவருக்கு கொடுத்ததால், 1961 - ஆம் ஆண்டு திருச்சபை வளர்ச்சி என்று நிறுவனத்தை ஆரம்பித்தார். திருச்சபையின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். சுவிசேஷம் சந்திக்கப்படாத மக்களுக்கு சுவிசேஷம் கூறி அவர்களை திருச்சபையில் இணைத்தல், தொலைந்த ஆத்துமாக்களை மறுபடியும் கிறிஸ்துவின் மந்தையில் சேர்த்தல், திருச்சபைகளை உருவாக்குதல் போன்றவற்றை செய்தார். புதிய ஏற்பாட்டில் ஆதித்திருச்சபைகள் வளர காரணமாய் இருந்தவற்றை அறிந்து, இவரும் அவற்றை பின்பற்றினார். தேவன் இவர்களை இந்தியா மட்டுமின்றி பல தேசங்களிலும் திருச்சபைகளை நிறுவும் பணிக்காக பயன்படுத்தினார். திருச்சபைகள் கிறிஸ்துவுக்குள் வேகமாக வளர வேண்டுமென வேத பாட வகுப்புகள், ஆராய்ச்சிகள் போன்றவற்றை கிரமமாக நடத்தி வந்தார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு அவருடைய சரீரத்தின் அங்கமாக மாறும்போது, தேவன் தமக்கேற்ற விதத்தில் பயன்படுத்துவார் என்பது இவருடைய அசைக்க முடியாத விசுவாசம்.
       1955 - ஆம் ஆண்டு "The Bridges of God" என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அதில் திருச்சபையின் வளர்ச்சி பற்றி ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளார். திருச்சபை வளர்ச்சியின் அவசியம் பற்றியும், அதில் ஏற்படும் சவால்களை மேற்கொள்வதைப் பற்றியும் எழுதியுள்ளார். இவை மிகவும் பிரயோஜனமாக உள்ளது. மெக்காவரன் எழுதிய இப்புத்தகத்தை இன்று நம் தேசத்தில் கிறிஸ்துவின் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அநேக மிஷனெரி இயக்கங்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் தேவன் பெரும் வளர்ச்சியைத் தந்து வருகின்றார். திருச்சபையின் வளர்ச்சியில் இவரின் பங்கின் விளைவாக பல மிஷனெரிகளும், மிஷனெரி இயக்கங்களும் இந்திய தேசத்தில் உருவாகி வருகிறது. எத்தனை பெரிய காரியம்! 
        டொனால்ட் மெக்காவரன் தன் வாழ்வின் இறுதிவரை கிறிஸ்துவுக்காகவும், திருச்சபையின் வளர்ச்சிக்காகவும் வாழ்ந்து 1990 - ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் நாள் தன் ஓட்டத்தை முடித்து கிறிஸ்துவின் இராஜ்ஜியத்தில் பிரவேசித்தார். இவர் மரிப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன்பு இவரது மனைவி மேரி மெக்காவரனும் ஆண்டவருக்குள் மரித்தார். இவர்கள் இந்திய தேசத்திற்கு ஆற்றிய பணிகள் ஏராளம் ஏராளம். இவர்கள் மரித்தாலும் இவர்களின் பணி இன்றும் தொடர்கிறது. அன்பானவர்களே! திருச்சபை வளர்ச்சியைக் குறித்து நம் தாகம், தரிசனம் எப்படி இருக்கிறது என சிந்தித்துப் பார்ப்போம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!