Isabellah Thoburn

 


இசபெல்லா தோபர்ன்

"இந்தியப் பெண் ஒருவருக்கு கல்வி கற்பிப்பதை விட 50 அடி உயரமுள்ள சுவரில் ஏறுவது சுலபம்" என்று இந்தியாவின் ஆண்களுக்கென முதல் கல்லூரியை ஆரம்பித்த அலெக்சாண்டர் டஃப் என்ற மிஷனெரி கூறுகிறார். ஆம், 18 - ஆம் நூற்றாண்டில் இந்தியப் பெண்களின் நிலை இப்படித்தான் இருந்தது.

ஜேம்ஸ் தோபர்ன் என்ற மெத்தடிஸ்ட் பிஷப் வட இந்தியாவிற்கு வந்த போது எந்த பெண்ணிற்கும் எழுத படிக்க தெரியவில்லை. இந்துக்கள் மத்தியில் பெண் கல்வியை பற்றிய ஆழ்ந்த தவறான கருத்துக்கள் காணப்பட்டது. இந்நிலையை மாற்ற விரும்பிய ஜேம்ஸ் 1866 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் வாழ்ந்து வந்த தன் தங்கைக்கு இந்தியப் பெண்களின் நிலையைப் பற்றி விவரித்து கூறினார். இறையியல் கல்வி கற்ற இசபெல்லா தோபர்ன் தான் செய்ய வேண்டிய பணி மிகவும் பெரியது என எண்ணி இந்தியாவிற்கு வர தயாரானார். அவரோடு இணைந்து கிளாரா A.சுவைன் அவர்களும் 1869 ஆம் ஆண்டு நவம்பர் 3 - ஆம் தேதி பாஸ்டனிலிருந்து புறப்பட்டனர்.

             1870 - ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் நாள் மும்பை பட்டணத்தில் கப்பல் இறங்கினர். இந்தியப் பெண்களின் நிலையைக் கண்டு அதிக பாரம் கொண்டார். அவர்கள் வாழ்வு மறுமலர்ச்சி அடைய வேண்டுமென வைராக்கியத்துடன் செயல்பட ஆரம்பித்தார். ஏப்ரல் 18-ஆம் தேதி, லக்னோ அமினபாட் பஜாரில் ஆறு பெண் பிள்ளைகளை வைத்து ஓர் பள்ளிக்கூடம் ஆரம்பித்தார். தானே அவர்களுக்கு ஆசிரியையாக இருந்து கல்வி கற்றுக் கொடுத்தார். பெண் பிள்ளைகள் வாழ்வில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது. இசபெல்லா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தேவனுடைய துணையோடு இப்பள்ளியானது, மாணவர்கள் தங்கி பயிலும் போர்டிங் பள்ளியாக (Boarding School) வளர்ச்சி அடைந்தது. இங்கு பயிலும் பிள்ளைகள் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பும் தங்களுக்கு வேண்டும் என கேட்டுக் கொண்டனர். நாளடைவில் 1886 - ஆம் ஆண்டு லக்னோவில் இசபெல்லா தோபர்ன் கல்லூரியை உருவாக்கினார். இன்று இக்கல்லூரி லக்னோ பல்கலைக்கழகத்தின் பெண்கள் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. அன்று இசபெல்லா தோபர்ன் விதைத்த விதை இன்று ஆலமரம் போல வளர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இக்கல்லூரியிலிருந்து அநேக பெண்கள் பட்டம் பெற்று சமுதாயத்தின் உயர்ந்த நிலையில் அமர்த்தப்படுகின்றனர். இசபெல்லா தோபர்ன் சிறந்த ஆசிரியராகவும், உற்ற நண்பராகவும் இருந்தார். மேலும் அயல்நாட்டில் இருந்து ஒருவர் நம்மிடம் எவ்வளவாய் அன்பு செலுத்துகிறார் என்று எண்ணிய மக்கள், இதற்கு காரணமான கிறிஸ்துவின் அன்பை உணர ஆரம்பித்தனர். ஞாயிற்று கிழமைகளில் அவர்கள் கிறிஸ்துவை ஆராதிப்பதற்கு ஏதுவாக, ஞாயிறு ஆராதனையையும், வேதாகம பாடசாலையையும் ஆரம்பித்தார். நாளடைவில் இவர் மூலம் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பெண்களே இவற்றை பொறுப்பெடுத்து நடத்த ஆரம்பித்தனர். 

        இசபெல்லா தோபர்ன் 1874 - ஆம் ஆண்டு கான்பூர் மாநிலத்தில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை நிறுவினார். 1891 ஆம் ஆண்டு நைநிட்டாலில் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட வெஸ்லி பள்ளியை ஆரம்பிக்க முக்கிய காரணமாக அமைந்தார். அநேக ஆண்டுகளாக இசபெல்லா தோபர்ன் RAFIQ-I-NISWAN என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1899 ஆம் ஆண்டு அவருக்கு மிகவும் பிடித்த ஆசிரியரும் பின் நாட்களில் நண்பருமான ஃபோபே ராவ் (Phoebe Rowe) பற்றிய வாழ்க்கை வரலாறு நூலையும் எழுதி வெளியிட்டார். இவ்வாறு பெண்களின் மறுமலர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்டார்.

                1886 முதல் 1890 ஆம் ஆண்டு வரை இசபெல்லா தோபர்ன் சுகவீனத்தினிமித்தம் தம் தேசத்திற்குச் சென்றார். அங்கு சென்ற போதும், தன் நேரத்தை வீணாகக் கழிக்காமல் தேவனுடைய பணியை சோர்வில்லாது செய்து வந்தார். 1890 ஆம் ஆண்டு மீண்டும் லக்னோவிற்கு வந்து தன்னுடைய பணியை ஆரம்பித்தார். சுமார் 9 ஆண்டுகள் லக்னோவில் அயராது உழைத்து வந்தார். மீண்டும் சரீரத்தில் சுகவீனம் ஏற்படவே, தன் தாயகத்திற்கு திரும்பினார். அங்கு அநேக கூடுகைகள் மற்றும் கருத்தரங்குகளில் பங்கு பெற்று இந்தியப் பெண்களின் அவல நிலையைப் பற்றியும், லக்னோவில் இயங்கி வந்த தன் கல்லூரிக்கான நிதித் தேவையைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார். பின்பு 1900 ஆம் ஆண்டு மீண்டும் இந்திய தேசத்திற்கு வந்தார். 1901 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி, காலரா வியாதியால் பாதிக்கப்பட்டதால், தேவ இராஜ்ஜியத்தில் பிரவேசித்தார்.

        எத்தனையோ பலவீனங்கள் அவரை நெருக்கிய போதும், இந்தியப் பெண்களுக்காக பெரிய காரியங்களைச் செய்த இசபெல்லா தோபர்ன் நமக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நாமும் தேவன் நம்மை தெரிந்தெடுத்ததற்கான நோக்கத்தை உணர்ந்தவர்களாக செயல்படுவோம்.

Comments

  1. Praise God for this type of dedicated persons filled with love of God in the history of India

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!