John Hyde, ஜான் ஹைடு






பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், இந்தியாவில் எல்லாப் பகுதிகளிலும் சுவிசேஷம் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. ஆனால் கிறிஸ்தவர்கள் மத்தியிலோ, திருச்சபையிலோ எந்தவித அனலுமில்லாத நிலை இருந்தது. பஞ்சாப் மாநிலத்திலும் இதே நிலை தான் காணப்பட்டது. 1892-ம் ஆண்டு இம்மண்ணில் ஜெபவீரன் ஜான் ஹைடு கால்பதித்தார். 

இவரது தந்தை ஸ்மித் ஹாரிஸ் ஹைடு குருத்துவப் பணி செய்து வந்தார். இவரது மனைவி திருமதி. ஹைடு அம்மையாரும் போதகருக்கேற்ற சிறந்த துணைவியாராக இருந்தார். ஆத்தும அறுவடைக்கு பணியாளர்கள் தம் திருச்சபையிலிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்று இத்தம்பதியர் தினந்தோறும் தேவனிடம் மன்றாடி வந்தனர். ஆனால் தன் மகனே இப்பணிக்குச் செல்வார் என்று சிறிதும் நினைக்கவில்லை. அழைத்தவர் தேவன் அல்லவா? ஆகவே பெற்றோர் சந்தோஷத்தோடு தங்கள் மகனை பஞ்சாப் மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர். 

ஜான் ஹைடு சாதாரண மனிதராகவே காணப்பட்டார். அவருக்குக் கேட்கும் திறன் சிறிது குன்றியிருந்தது. இது அவர் இந்திய மொழிகளைக் கற்றுக் கொள்ள இடையூராக இருந்தது. எனினும், அதனைப் பொருட்படுத்தாது முன்னேறி சென்றார். "The Punjab Prayer Union" என்ற குழுவோடு இணைந்து தன் ஊழியத்தை ஆரம்பித்தார். அதிலுள்ள நபர்கள் அனைவருடனும் அடிக்கடி கூடி ஜெபித்தார்கள். ஜெபத்தின் அவசியத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். பஞ்சாப் ஆண்டவரை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் ஜெபமே வழி என உணர்த்தினார். ஆகவே ஒரு நாளின் அரை நாளை ஜெபத்திற்காக ஒவ்வொரு நாளும் செலவிட்டார். அவர் மேடையிலிருந்து பிரசங்கிக்க ஆரம்பிக்கும் பொழுதே அநேகர் பாவ அறிக்கை செய்து கதறி அழுதார்கள். தன் வாழ்நாளில் பல மணி நேரத்தை முழங்காலிலேயே செலவிட்டார். தன்னுடைய உணவு, ஓய்வு, உறக்கத்தைப் பற்றி அவர் சற்றும் பொருட்படுத்தவில்லை. 

அவருடைய ஜெப வாழ்க்கை எப்படி இருந்தது என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். ஒரு முறை 36 மணி நேரம் தொடர்ந்து முழங்காலிலேயே நின்று ஜெபித்தார்!  மற்றொரு முறை 30நாள் தொடர்ந்து இரவு, பகலாக ஜெபித்தார். அவருடைய ஜெபத்தில் நம்பிக்கையின் பெலனும், விசுவாசத்தின் உறுதியும் காணப்பட்டது. மக்கள் அவரை, "The Man who never sleeps" என்று அழைத்தனர். 

முதலில் ஆண்டவரிடம் தினமும் எனக்கு ஒரு ஆத்துமாவைத் தாரும் என்று ஜெபித்தார். ஆண்டவரும் அவருக்கு பதிலளித்தார். பின் 2 ஆத்துமாக்கள்... பின் 4 முதல் 10 ஆத்துமாக்கள் வரை ஒவ்வொரு நாளும் ஆதாயப்படுத்தினார். தேவனுக்கு உகந்த பாத்திரமாக செயல்பட்டார். ஜான் ஹைடு அதிக நாள் இந்த உலகில் வாழாவிட்டாலும் தேவனுக்காக அதிகம் சாதித்தார். 

மருத்துவர் ஹைடு அபாய நிலையில் இருப்பதாக அறிவித்தவுடன் இங்கிலாந்து சென்று சிகிச்சை பெற்றார். அவருடைய இருதயம் இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் நகர்ந்து இருப்பதாகவும், இருதயத்தில் பாரம் அதிகரித்தால் இப்படியாகும் எனவும் மருத்துவர்கள் கூறினார்கள். ஜான் ஹைடு பஞ்சாப் மாநிலத்திற்காக ஏறெடுத்த ஜெபம் இன்றும் பலன் தந்து வருகிறது. இன்று மக்கள் கூட்டங்கூட்டமாக  இயேசுவை ஏற்றுக் கொண்டு வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் வாலிபன் ஜான் ஹைடுவின் ஆழ்ந்த ஜெபமும், அர்ப்பணமுமே...

இதனை வாசிக்கும் வாலிபனே, இன்று ஆண்டவருடன் உன்னுடைய தனிப்பட்ட உறவு எப்படிப்பட்டதாயிருக்கிறது? மற்றவர்களுக்காக ஜெபிக்கிறாயா? அல்லது உனக்காகவே தேவனிடம் புலம்பிக் கொண்டிருக்கிறாயா?



Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!