Dr.Ida Scudder டாக்டர். ஐடா ஸ்கடர்


டாக்டர் ஜான் ஸ்கடர்

திண்டிவனத்தில் மருத்துவ மிஷனெரியாக ஊழியம் செய்து வந்த டாக்டர் ஜான் ஸ்கடர் ஜூனியர் மற்றும் சோபியா ஸ்கடர் தம்பதியினரின் ஐந்தாவது குழந்தையாக 1870 ஆம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி ஐடா ஸ்கடர் பிறந்தார். ஐடா ஸ்கடருக்கு ஆறு வயதாக இருக்கும்போது 1877 ஆம் ஆண்டில் இந்தியாவில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தின் கொடுமையை நேரில் கண்ட ஐடா தன் வாழ்நாளில் ஒருபோதும் மிஷனெரியாகப் போவதில்லை என தீர்மானித்திருந்தார். மசாசூசெட்ஸில் உள்ள நார்த்ஃபீல்ட் செமினரியில் படிக்க டுவைட் மூடியால் அழைக்கப்பட்டார். அங்கு அவர் குறும்புகளுக்கு நற்பெயர் பெற்றார். 1890 இல் தமிழ்நாட்டின் திண்டிவனத்தில் உள்ள மிஷன் பங்களாவில் அவரது தாயார் நோய்வாய்பட்டிருந்தபோது தனது தந்தைக்கு உதவுவதற்காக இந்தியா திரும்பினார். அங்கு தங்கியிருந்த காலத்தில் ஒரு நாள் இரவில் நடந்த நிகழ்வு அவரது வாழ்வை மாற்றியது. 

அந்நிகழ்வை இவ்வாறாக குறிப்பிடுகிறார் ஐடா, 

...... அன்று இரவு என்னால் தூங்கவே முடியவில்லை! 
காரணம்,
 
பிள்ளை பேற்றுக்காக எதிர்நோக்கி இருந்த தன் அன்பு மனைவியருக்கு, உள்ளூர் மருத்துவச்சிகளால் வைத்திய உதவி செய்ய முடியவில்லை என்றவுடன் அவர்களுக்கு மருத்துவம் பார்க்க வரும்படி என்னை வந்து அழைத்தார்கள். எனக்குத்தான் மருத்துவத்துறையில் பயிற்சி இல்லையே நான் எப்படி செல்ல முடியும்? அப்பா மருத்துவர் என்றால் பிள்ளையும் மருத்துவராகி விட முடியுமா என்ன? 
என்னால் முடியாது. வேண்டுமானால் என் அப்பாவை அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னேன்! பெண்களுக்கு ஆண்கள் மருத்துவம் பார்ப்பதை எங்கள் கலாச்சாரம் அனுமதிப்பதில்லை. 

பேர் காலத்தில் தாய் மரணத்தை சந்திக்க நேர்ந்தால்.... உங்கள் மனைவியரின் உயிர் பெரிதா? கலாச்சாரம் பெரிதா? இல்லை அம்மா, ஆண் மருத்துவரை நாங்கள் அனுமதிப்பதில்லை.

என்ன மடமை. இதற்கு பெயர் கலாச்சாரமா? 
இந்நிகழ்ச்சிக்கு பின் எப்படி தூக்கம் வரும்!

மறுநாள்: 
சாவு மேளம் கேட்டது! 
அடுத்தடுத்து மூன்று சம ஊர்வலங்கள்! 
இறந்து போனது யார் என்று அறிந்திட என் உள்ளம் விரும்பியது! 
நேற்று நம் வீட்டுக்கு வந்து போனார்களே அந்த முஸ்லிம்... அந்த பிராமணர்... அந்த... அந்த மூவரின் மனைவியரும் மகப்பேறுகால வேதனையினின்று காப்பாற்றப்படாமலே இறந்து போனார்கள் அம்மா, என்றான் எங்கள் வீட்டு உதவியாள். 

என் தகப்பனார் ஜான் ஸ்கடர் ஜூனியர் ஒரு சிறந்த மருத்துவர். அவர் மட்டுமல்ல, அவர் உடன்பிறந்தவர்களில் ஏழு பேர் மருத்துவ மேதைகள். எனது பாட்டனார் ஜான் ஸ்கடர் நியூயார்க் பட்டணத்தில் மருத்துவ சேவை செய்து வந்த காலத்தில் 1814 ஆம் ஆண்டு மருத்துவ ஊழியத்துக்கு தன்னை ஆண்டவர் அழைக்கவே இந்தியாவிலும் இலங்கையிலுமாக வெற்றிப் பணியாற்றியவர். 
எனது குடும்பமான ஜான் ஸ்கடர் குடும்பத்தில் மட்டும் மொத்தம் 41 ஊழியர்கள் எழும்பி சுவிசேஷத்தை அறிவிக்கும் பணிக்கு தங்களை ஒப்புக்கொடுத்து சேவை செய்தவர்கள். இவர்கள் ஒட்டுமொத்தமாக சேவை செய்த வருடங்கள் சுமார் 1000 ஆண்டுகள். மிஷனெரி சரித்திரத்தில் மிக முக்கியமான சாதனையை செய்த குடும்பம் எங்கள் குடும்பம். 

இருந்தும் எனக்கு இந்த ஊழியத்தில் நாட்டமில்லை. சம்போகமாக திருமண வாழ்வை அமைத்துக் கொண்டு அமெரிக்காவில் வாழ வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். ஆனால் அன்று இரவு என் கனவு கோபுரம் சரிந்தது. நானும் என் குடும்பத்தின் 42 - வது நபராக தேவனுடைய ஊழியத்தில் குதிக்க வேண்டி தேவன் குறுக்கிட்ட அந்த இரவில் என்னால் எப்படி நிம்மதியாக தூங்க முடியும்!

இரவு முழுவதும் தேவனுடைய சன்னிதியில் விழுந்து கிடந்தேன். அடுத்த நாள் என் தாய் தந்தையரை அணுகி எனது தீர்மானத்தை அவர்களுக்கு சொன்னேன். நானும் மருத்துவக் கல்வி பயின்று இந்தியாவில் மருத்துவ ஊழியராக வந்து பணி செய்வேன் என்று சொன்னதும் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.  

இது ஐடா ஸ்கடர் அம்மையார் ஆண்டவரின் பணிக்கான அழைப்பை பெற்ற விதம். 
இந்திய மக்களின் குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரத் தேவைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஊழியத்தைத் தொடங்குவதற்கு தேவன் அவருக்கு முன் வைத்த அழைப்பு சவாலாக இருப்பதாக அவர் நம்பினார். அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. 

ஐடா மீண்டும் அமெரிக்காவிற்கு சென்று நியூயார்க் நகரில் உள்ள கார்னெல் மருத்துவ கல்லூரியில் மருத்துவப் பயிற்சியில் சேர்ந்தார். மேலும், கார்னெல் பல்கலைக்கழகத்தின் வெயில் மருத்துவக் கல்லூரியில் பெண்களை மருத்துவ மாணவர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. இருப்பினும், ஐடாவை ஏற்றுக் கொண்டனர். ஐடா இங்கு பயின்ற முதல் பெண் மருத்துவ பட்டதாரி.

வேலூரில் மருத்துவப் பணி

இந்தியாவிற்கு திரும்பிய ஐடா 1900 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து 75 மைல் தொலைவில் உள்ள வேலூரில் பெண்களுக்கான சிறிய மருத்துவ கிளினிக் ஒன்றை திறந்தார். அவர் இந்தியா வந்தவுடன் அவரது தந்தை 1900 ஆம் ஆண்டு இறந்தார். 1902 ஆம் ஆண்டு 40 படுகைகளுடன் மேரி டேபர் ஷெல் நினைவு மருத்துவமனையைத் திறந்தார். இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் 5000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருந்தார். தென்னிந்திய பெண்களுக்கு சிறந்த ஆரோக்கியத்தை கொண்டுவர மருத்துவப் பள்ளியைத் திறக்க முடிவு செய்தார். 

1903 ஆம் ஆண்டு கூட்டுப் பணிகளுக்கான முதல் பயிற்சி வகுப்பைத் தொடங்கினார். 1906 ஆம் ஆண்டு கால அட்டைகளைப் பயன்படுத்தி கிராமங்களுக்குச் செல்லும் சாலையோர கிளினிக் ஒன்றைத் தொடங்கினார். 1909ஆம் ஆண்டு டிப்ளமோ படிப்புடன் நர்சிங் பள்ளியைத் தொடங்கினார். 1918 ஆம் ஆண்டு பெண்களுக்கான ஆசியாவின் முதன்மையான கற்பித்தல் மருத்துவப்பள்ளியை தொடங்கினார். 1924 ஆம் ஆண்டு வேலூரில் உள்ள தோட்டப்பாளையத்தில் தற்போதைய தளம் திறக்கப்பட்டது. நிதி திரட்டுவதற்காக அவர் அமெரிக்காவிற்கு பலமுறை பயணம் செய்தார். 

மருத்துவப் பள்ளியானது 1942 ஆம் ஆண்டு கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் என்ற பெயரில் எம்.பி.பி.எஸ் பட்டம் வழங்கும் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. 1946 இல் செவிலியர் கல்லூரி திறக்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் பட்டப்படிப்பாகும். 1947-இல் இந்த கல்லூரியில் ஆண்கள் 35 வகுப்பில் 10 பேர் அனுமதிக்கப்பட்டனர். 1948 ஆம் ஆண்டு உலகில் தொழுநோய்களுக்கான முதல் மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை மற்றும் முதல் கண் சிகிச்சை முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. 1950 இல் தெற்காசியாவில் முதல் நரம்பியல் அறிவியல் மற்றும் மருத்துவ முதுகலை படிப்புகள் தொடங்கப்பட்டன. 1952 ஆம் ஆண்டின் சிறந்த ஐந்து பெண் மருத்துவர்களில் ஒருவராக நியூயார்க் மருத்துவமனையின் எலிசபெத் பிளாக்வெல் மேற்கோள் ஐடாவிற்கு வழங்கப்பட்டது. இதை ஐடா தனது 82 ஆவது வயதில் 1953 ஆம் ஆண்டு பெற்றார். இதற்காக அவரது நண்பர்கள் உலகெங்கிலுமிருந்து வாழ்த்தி அனுப்பிய மின்னஞ்சல் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. 

இறுதி நாட்கள் 

இந்திய மக்களுக்கு அயராது சேவை செய்த ஐடா சோபியா ஸ்கடர், கொடைக்கானலில் உள்ள ஹில்டாப்பில் உள்ள பங்களாவில் 1960 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி, தனது 89 வது வயதில் காலமானார். இனி இந்தியாவில் கால்பதிக்க மாட்டேன் என்று உறுதியளித்த அந்தப் பெண், தான் மரிக்கும் வரை இந்தியாவிலேயே பணியாற்றினார். 

1900ஆம் ஆண்டு ஐடா நிறுவிய மருத்துவமனை தற்போது 5500 வெளி நோயாளிகள், 2500 உள்நோயாளிகள், 75 அறுவை சிகிச்சைகள், 22 கிளினிக்குகள் மற்றும் சுமார் 30 பிரசவங்கள் என ஒவ்வொரு நாளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மருத்துவப் படிப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் 60 மாணவர்களில் 25 பெண்கள் இளங்கலை மருத்துவப் படிப்புக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வேலூர் கிறிஸ்தவ மருத்துவ மையம் உலகின் மிகப்பெரிய கிறிஸ்தவ மருத்துவமனையாக இருக்கிறது. அதன் மருத்துவப் பள்ளி இப்போது இந்தியாவின் முதன்மை மருத்துவ கல்லூரி ஆகும். 

வேலூரில் மருத்துவ ஊழியம் பார்த்ததோடு இன்றுள்ள பிரம்மாண்ட மருத்துவமனையை நிறுவி ஆசியாவின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றாக அதன் அந்தஸ்து இன்று உயர்ந்திருக்கிறது என்றால் அந்த வீரப் பெண்ணின் சாதனையை என்னவென்று சொல்ல! 

இருள் கவ்வி நிற்கும் இந்தியாவில் ஆன்மமுக்காட்டை நீக்கி அறிவுப்பூர்வமாக, இயேசுவே தெய்வம் என்பதை அவர்களுக்கு வழங்கும் இச்சவாலான பணிக்கு இன்று ஊழியர் தேவை! 

ஸ்கடர் குடும்பத்தைப் போல 42 பேரை அனுப்பி வையுங்கள் என்று கேட்கவில்லை! வீட்டுக்கு ஒரு வாலிபனை - தேர்ந்த இளைஞனை அனுப்பி வையுங்கள் என்று கேட்கிறோம்! 

ஒரு அந்நிய பெண்ணுக்கு இந்த நாட்டு மக்களின் மேல் இத்தனை அக்கறை இருக்குமென்றால் ஒரு இந்திய கிறிஸ்தவனுக்கு தன் தாய் நாட்டு மக்கள் மீது எவ்வளவு அக்கறை இருக்க வேண்டும்!

Comments

Popular posts from this blog

THOMAS WALKER தாமஸ் வாக்கர்

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!