Vedhanayagam Sastriar வேதநாயகம் சாஸ்திரியார்
1774 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் நாள் கிறிஸ்தவ குடும்பம் ஒன்றில் வேதநாயகம் சாஸ்திரியார் மகனாகப் பிறந்தார். தனது ஐந்தாம் வயதில் இலக்கண வித்துவான் வேலுப்பிள்ளையிடம் இலக்கணம் பயின்று, அதில் சிறந்தும் விளங்கினார். ஆனால் சிறு வயதிலேயே தன் தாயாரை இழந்ததால், படிப்பின் மீது அவருக்கு இருந்த ஆர்வம் குறைந்து தன் தாத்தாவின் மாடுகளை மேய்த்து வந்தார். 1783 ஆம் ஆண்டு இவரது தகப்பன் தேவசகாயம் தன் மகன் இலக்கியம் மற்றும் கணிதத்தை கற்க வேண்டும் என்பதற்காக ஆசிரியரை வீட்டிற்கு வந்து கற்பிக்குமாறு ஏற்பாடு செய்தார். பத்தாம் வயதில் ஒருநாள் மரச்சிலுவை ஒன்றை தரிசனமாக கண்டார். அன்று முதல் அவருடைய வாழ்க்கை மாறியது. கிறிஸ்துவை முழுமனதோடு ஏற்றுக்கொண்டார்.
1785 ஆம் ஆண்டு ஜெர்மானிய மிஷனெரி ஸ்வார்ட்ஸ் ஐயர் நெல்லைக்கு வந்தார். வேதநாயகத்தின் துடிப்பான செயலும், பேச்சும் அவரை அதிகம் கவரவே, அவரது தகப்பனாரின் அனுமதியோடு அவரை தஞ்சைக்கு அழைத்து வந்தார். ஸ்வார்ட்ஸ் ஐயர் அவர்கள் பல பாடங்களை வேதநாயகத்திற்கு கற்றுக் கொடுத்தார். அப்போது தஞ்சை மராட்டிய மன்னரின் மகனான நான்காவது சரபோஜியும் வேதநாயகத்துடன் பயின்றார். வேதநாயகத்திற்கு ஸ்வார்ட்ஸ் ஐயர் சங்கீத புத்தகத்தை கொடுத்து வாசிக்கும்படி கூறினார். வரும் காலத்தில் அவர் சிறந்த பாடகராக விளங்க இப்புத்தகம் அடித்தளமாக விளங்கியது. குருவிடமிருந்து சீஷர்கள் கற்றுக் கொள்வது போல வேதநாயகமும் ஸ்வார்ட்ஸ் ஐயரிடமிருந்து கிறிஸ்துவை பற்றி அநேக காரியங்களை கற்றுக் கொண்டார். அதோடு மட்டுமின்றி கிறிஸ்துவின் அன்பை ஒவ்வொரு நாளும் ருசித்து வந்தார்.
1789 ஆம் ஆண்டு தரங்கம்பாடியிலுள்ள இறையியல் கல்லூரிக்கு வேதநாயகத்தை அனுப்பி வைத்தார். அங்கு மேற்படிப்பை முடித்த பின் தஞ்சையில் இயங்கி வந்த இறையியல் கல்வி நிலையத்தில் தலைமை ஆசிரியராக பணியில் அமர்ந்தார். பின் சரபோஜி IV மன்னரின் அவைப்புலவராக இருந்தார். அச்சமயம் வேதநாயகம் சாஸ்திரியாருக்கு திருமணம் முடிந்தது. இவருக்கு மன்னர் சில காலம் மாத ஊதியமும் வழங்கி வந்தார். மக்களுக்குப் புரியும் படியாக செய்யுள்களையும் பாடல்களையும் எழுதினார். இதனால் அரசவையில் இவரது புகழ் பரவியது. சரபோஜி மன்னரையும் புகழ்ந்து பாடி பல பரிசுகளைப் பெற்றார். ஒருநாள் அரசர் வேதநாயகத்திடம், தன் தெய்வத்தை புகழ்ந்து ஒரு பாடலை பாட வேண்டும் என கேட்டுக்கொண்டார். "என் இயேசுவை பாடிய வாயால் வேறொருவரையும் புகழ்ந்து பாட மாட்டேன்" என்று சாஸ்திரியார் உறுதியாக கூறினார். மேலும் அரசரின் கட்டளையை நிறைவேற்ற முடியாமல் சோகத்துடன் வீடு திரும்பிய சாஸ்திரியாரிடம் மனைவி காரணத்தை கேட்டார். இருவரும் வேதனை அடைந்தனர். அந்நேரத்தில் வேதநாயகம் சாஸ்திரியார் மனதில் தோன்றிய பாடல் வரிகள் தான், "ஏசுவையே துதிசெய் நீ மனமே, ஏசுவையே துதி செய்" என்ற பாடல். மறுநாள் இப்பாடலை அரசவையில் சென்று பாடிய போது, அன்று முதல் மன்னன் அவரை தொந்தரவு செய்யவே இல்லை.
விசுவாசத்தில் நிலைத்து நின்று தன் கவித்திறமையால் அநேக பாடல்களை இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைக்காக பாடினார். அவை இன்றும் அழியா காவியமாகவே திகழ்ந்து வருகிறது. தனது 34 ஆம் வயதிற்குள் 52 நூல்களை வேதநாயகம் எழுதினார். அதில் பெத்லகேம் குறவஞ்சி என்ற நூல் மிகச்சிறந்த நூலாகும்.
1849 ஆம் ஆண்டு புது வருட ஆராதனையில் அவர் பாடிய பாடலே, "பாடி துதி மனமே, பரனைக் கொண்டாடி துதி தினமே" என்பதாகும். சுவிசேடக் கவிராயர், ஞான தீபக்கவிராயர் என்ற பட்டங்களை பெற்ற இவர், கிறிஸ்துவை புகழ்ந்து பாடுவதில் தன் நாட்களைக் கழித்தார். தன் ஆவிக்குரிய தகப்பனாகிய ஸ்வாட்ஸ் ஐயர் மூலம் இறையியல் பயிற்சி பெற்ற சாஸ்திரியார், கிறிஸ்தவ சமுதாயத்திற்கு மாபெரும் கொடையாக விளங்கினார். அவரின் அடிச்சுவட்டை பின்பற்றி இன்றும் சாஸ்திரியாரின் குடும்பம் இப்பணியை செய்து வருகின்றனர். ஆயிரம் ஆயிரம் பேரை பாடல்கள் மூலம் கிறிஸ்துவுக்குள் வழி நடத்தி வருகின்றனர்.
அன்பானவர்களே, ஆண்டவர் நமக்கு தந்த திறமைகளை எப்படி பயன்படுத்துகிறோம்?
Comments
Post a Comment