ஹக்கிவ்கா, Ha Chev Ka




  ஹக்கிவ்கா – பேராயர் ரிச்சர்ட்சனாக மாறிய கதை.
 வங்காள விரிகுடா கடல்... இது கார் நிக்கோபார் தீவை சூழ்ந்திருந்தது. இத்தீவில் நிக்கோபாரி இன மக்கள் நிரம்பியிருந்தனர். ஆதிவாசி இனம்! நிர்வாணம் வாழ்க்கை! வேட்டையாடுவதே இவர்களது தொழில்.
 19 – ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகள் அவை! மிஷனெரி வேதப்பன் சாலமோன் இத்தீவில் அடியெடுத்து வைத்தார். இவர் தென்னிந்தியாவில் வாழ்ந்து வந்தவர். 12 ஆதிவாசி பையன்களை தேர்ந்தெடுத்து, பள்ளிக்கூடம் அமைத்து கல்வியறிவு கொடுத்தார். அதோடு கிறிஸ்துவையும் அவ்வாலிபர்களுக்கு அறிமுகம் செய்தார். நிக்கோபாரி மக்களுக்கு அவர்கள் இன மக்களே சுவிசேஷம் சொல்ல வேண்டுமென ஏவப்பட்டார்.
12 பையன்களில் ஹக்கிவ்கா என்ற வாலிபனும் இருந்தான். பள்ளி வாழ்வை வெற்றியோடு முடித்த ஹக்கிவ்கா பர்மாவிற்கு வேதாகம உயர்கல்வி பயில அனுப்பப்பட்டான். பின் வெற்றியோடு திரும்பி வந்த ஹக்கிவ்கா, தான் கல்வி பயின்று உருவாக்கப்பட்ட பள்ளியில் ஓர் ஆசிரியரானான். அவனும் தன் இன மக்களுக்கு கிறிஸ்து வேண்டுமென்பதில் ஆர்வமாக இருந்தான். நவ நாகரீகத்தையும், கல்வியையும் அறிமுகம் செய்ய எண்ணினான். உலகத்தின் வேகமான போக்கை தன் நிக்கோபாரி மக்களுக்கு உணர்த்த துடித்தான். தன் இதயத்திலிருந்த பாரத்தை நிறைவேற்ற ஆசிரியராக மட்டும் வாழ்ந்தால் முடியாது என்று கண்டு தன்னை சுவிசேஷகனாகவும், சமுதாயத்தின் சீர்திருத்தவாதியாகவும் அமைத்து தீவிரித்தான்.
 பிரிட்டிஷ் மிஷனெரி ஒருவரின் துணையோடு ரோம எழுத்துக்களை எழுத்து வடிவமே இல்லாத தன் தாய் மொழியில் புகுத்தி எழுத்தை உருவாக்கினான். வேதாகமத்தை தன் தாய் மொழியில் மொழிபெயர்த்தான். இன்னும் சில புத்தகங்களையும் மொழிபெயர்த்தான். அதுமட்டுமின்றி ஆங்கிலம் – நிக்கோபாரி சொல்லகராதியை (Dictionary) உருவாக்கினான். இம்மக்களின் பிரதிநிதியாக அவர்களது ஆவிக்குரிய மற்றும் கல்விக்கும் மட்டுமல்லாது பொருளாதார மேம்பாட்டிற்கும் உதவினான். அதற்காக கடினமாக உழைக்கவும் செய்தான்.
இயற்கையாகவே விளையும் விளை பொருள்களையே அனுபவித்த அம்மக்களுக்கு வேளாண்மையைச் சொல்லிக் கொடுத்து வெற்றிலை, தென்னை முதலியவற்றை பயன்படுத்த உதவினான். பண்டமாற்று முறையிலிருந்து பணப்புழக்கத்தை மக்களுக்கு அறிமுகம் செய்தான்.
 1896 – ஆம் ஆண்டு தென்னிந்திய மிஷனெரி வேதப்பன் சாலமோனால் உருவாக்கப்பட்ட இந்த ஹக்கிவ்கா தான் 1950 – ஆம் ஆண்டு அத்தீவின் பேராயரான ரிச்சர்ட்சன் ஆவர். ரிச்சர்ட்சன் என்ற பெயர் மிஷனெரியால் அன்று அழைக்கப்பட்டதாகும். 1912 – ஆம் ஆண்டு உயர் கல்வியையும், வேதாகமக் கல்வியையும் பெற்றவராக திரும்பி வந்த ஹக்கிவ்கா என்னும் ரிச்சர்ட்சன் 1934 ஆம் ஆண்டு அங்குள்ள திருச்சபையின் போதகரானார்.
1912 – ஆம் ஆண்டிலிருந்து சுவிசேஷத்திற்காக ரிச்சர்ட்சன் அநேக பாடுகளை சந்தித்தார். பாடு வேதனைகளையும், சிறை வாசத்தையும், மரணத்திற்கு நிகரான அநேக கொடுமைகள் ஊடாக கடந்து வந்தார். இப்பாடுகளின் மூலம் அவருடைய அர்ப்பணிப்பும், துணிச்சலும் வெளிப்பட்டது. கார்நிகோபார் பழங்குடி இனத்தவரின் உண்மையான தலைவராக அம்மக்களால் மதிக்கப்பட்டார். 1900 – ஆம் ஆண்டில் எழுத்துக்களில்லாத இம்மக்களின் மொழியில் எழுத்து வடிவம் தந்த பின் இன்று அம்மொழியில் அச்சகம் இருக்கிறது. மாதந்தோறும் பல பத்திரிகைகள் வெளியாகின்றன. ஆரம்பப் பள்ளியில் மாணவர்கள் இம்மொழியிலேயே பாடம் படிக்கின்றனர். படிப்பறிவே இல்லாத இம்மக்கள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். மேலும் மக்கள் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட ஏற்பாடு செய்தார். நவீன கூட்டுறவு சங்கங்களை அமைத்தார். இத்தீவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இவ்வகை கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டன.
1950 – ஆம் ஆண்டில் அந்தமான் நிக்கோபார் பேராயத்தில் உதவி பேராயராக திகழ்ந்த ரிச்சர்ட்சனுக்கு, 1945 – ஆம் ஆண்டில் செராம்பூர் கல்லூரி டாக்டர் பட்டம் அளித்தது. மேலும் 1952 – ஆம் ஆண்டில் அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேச பிரதிநிதியாக இந்திய பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார்.
இந்திய அரசு அவருக்கு பத்மவிபூஷன் பட்டம் அளித்து அவரை கௌரவித்தது. மேலும் இங்கு 98 % மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர். 1978 – ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் நாள் பேராயர் ரிச்சர்ட்சன், தனது 96 – ஆம் வயதில் பரலோகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அவரது அடக்க ஆராதனையில் அத்தீவின் மக்கள் வெள்ளம் போல் கண்ணீர் சிந்தினார்கள். அவரது செயலுக்காக நன்றி செலுத்தும் விதமாக அமைக்கப்பட்டிருந்த சிலையின் நிழலில் அவரது உடல் புதைக்கப்பட்டது.

ஒரு தனி மனிதனால் தேவன் இத்தனை பெரிய வரலாற்றை சாதிக்க முடியுமென்றால் இத்தகைய சாதனையாளர்கள் வரிசையில் நம்மையும் நாம் இணைத்து செயல்பட்டால் எத்தனை மாபெரும் சரித்திரத்தை உருவாக்க முடியும்?

Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!