வில்லியம் டிண்டேல் William Tyndale, Father of English Bible Translators
டிண்டேலின் இளமைக்காலம்:
வில்லியம் டிண்டேல் 1494ம் ஆண்டு இங்கிலாந்து தேசத்தில் பிறந்தார். சிறு வயது முதலே மிகவும் பயபக்தியுடன் வளர்க்கப் பட்டார். பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ,ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முந்தைய கால மூடநம்பிக்கைகள் இவரை சிந்திக்க வைத்தன. ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தார். இதன் விளைவு,அவரை ஒரு சபை சீர்திருத்தவாதியாக உருவாக்கியது. மார்ட்டின் லுத்தர் மற்றும் சில புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதிகளின் கருத்து இவரை மிகவும் கவர்ந்தது.1521 ம் ஆண்டு இவர் கத்தோலிக்க குருவாக குருத்துவம் பெற்றார். திரும்பவும் தன் ஊருக்குத் திரும்பி, அங்குள்ள சபையின் போதகரானார்.டிண்டேலின் முற்போக்குத்தனமான சிந்தனைகளும், கத்தோலிக்க பழமைவாதத்திற்கு எதிரான இவர செயல்களும் சபை தலைவர்களின் கவனத்தைதிருப்பியது.
முதல்ஆங்கில வேதம்:
1523ல் டிண்டேல் லண்டன் திரும்பி புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பணியில் தன்னை ஈடுபடுத்த நினைத்தார். ஆனால் அது சட்ட விரோதமானது என அறிந்து, வேதாகமத்தை சொந்த மொழியில் அச்சிட்டு தருவதன் மூலம் மக்களை சடங்கு சம்பிராதயங்களில் இருந்தும், சபையின் அர்த்தமற்ற சீர்கேடுகளில் இருந்தும் நிச்சயம் விடுவிக்க முடியும் என ஆணித்தரமாக நம்பினார். டிண்டேல் இங்கிலாந்து சபைக்கு எதிராக குரல் கொடுக்க துணிந்தார். மற்றும் இவரது சிந்தனைகள் மார்ட்டின் லுத்தரின் சிந்தனைகளுக்கு ஒத்திருந்தது.
1524ல் டிண்டேல் சில லண்டன் வியாபாரிகளின் உதவியுடன் இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு ஜெர்மனிக்குச் சென்று குடியேறினார். இதன் மூலம் தனது வேதாகம மொழிபெயர்ப்பு பணியை மிகுந்த பாதுகாப்புடன் நிறைவேற்ற முடியும் என நம்பினார் .விட்டன்பர்க் நகரில் பணியைத் தொடர்ந்த டிண்டேலுக்கு மார்ட்டின் லுத்தரின் ஒத்துழைப்பும் கிடைத்தது. ஒரு வருட பணிக்குப் பின் 1526ல் புதிய ஏற்பாடு புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இதன் பிரதிகள் வாம்ஸ் பட்டணத்தில் அச்சிடப்பட்டது. அப்போது அவை இங்கிலாந்திற்கு கடத்தி செல்லப்பட்டன. இவையே உலகத்தின் முதல் ஆங்கில வேதாகமம் என்கிறது ஆங்கில காலக் குறிப்பு. கடும் எதிர்ப்பின் மத்தியில் பணி செய்து வந்த டிண்டேல், இனி சிறிது காலம் மறைந்திருந்து மொழி பெயர்ப்புப் பணியைச் செய்யலாம் என எண்ணினார்.
காட்டிகொடுக்கப்பட்டார்:
இந்நிலையில் டிண்டேல் தனது நண்பன் ஹென்றி பிலிப்ஸ்ஸால் காட்டி கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வில்வார்டே கோட்டையில் 500 நாட்கள் காவல் செய்யப்பட்டு பல சித்திரவதைகளுக்கு உள்ளானார்.1536 ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதியன்று, சத்தியத்தை மறுதலிக்கும் படியும், வேதாகம மொழிபெயர்ப்பு தவறு என்று ஒப்புக் கொள்ளவும் துன்புறுத்தப்பட்டார். முடிவில் உயிருடன் கட்டைகளின் நடுவில் எரிக்கப்படும் படி தீர்ப்பு வெளியானது. அவர் உயிருடன் எரிக்கப்படும் முன்னே ஆயிரக்கணக்கான ஆங்கில புதிய ஏற்பாடுகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன.
" கர்த்தாவே இங்கிலாந்து மன்னரின் கண்களை திறந்தருளும்" என்னும் இறுதி முழக்கத்துடன் டிண்டேல் தனது மூச்சை விட்டார். இதன் விளைவு வெறும் மூன்றே வருடத்தில் மன்னர் 8ம் ஹென்றி ,டிண்டேலின் மொழி் பெயர்ப்பை அடிப்படையாக கொண்டு முதல் ஆங்கில வேதாகமம் " Great Bible "யை வெளியிட்டார். டிண்டேல் இறந்த போது பழைய ஏற்பாடு முழுவதும் மொழிபெயர்க்கப்படவில்லை என்றாலும் ,அதன் பின் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில வேதாகமங்கள் அனைத்தும் ,அவரின் மொழி பெயர்ப்பை அடிப்படையாக கொண்டே மொழிபெயர்க்கப்பட்டன. 1611ல் வெளியிடப்பட்ட பிரபலமான ' King James Version' ம் இதில் அடங்கும்.
சூழ்நிலைை சாதகமில்லாத அந்த காலத்திலும் தேவனுக்காக வாழ்ந்து மடிவதையே தன்னுடைய வாஞ்சையாகக் கொண்டிருதார். _கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்_ (யோவான் 12:24) என்ற வேதவசனத்தின் படி, டிண்டேல் என்னும் கோதுமை மடிந்ததால் மட்டுமே இன்று அதனால் விளைந்த பலனை நாம் அனுபவித்து வருகிறோம்.
Comments
Post a Comment