THOMAS WALKER தாமஸ் வாக்கர்
பண்ணைவிளை பங்களாவிற்குள் சென்றவர்கள் எவரும் தனி மனிதனாய் திரும்பியதில்லை. கிறிஸ்துவை இதயத்தில் ஏந்தியபடி தான் திரும்பி வர முடியும். அந்த பங்களாவிற்குச் சொந்தக்காரராய் இருந்தவர் தாமஸ் வாக்கர் ஐயர் அவர்கள்.
தாமஸ் வாக்கர் பிப்ரவரி 9, 1859 - ஆம் ஆண்டு இங்கிலாந்தில் டெர்பிஷையரில் உள்ள மேட்லாக்பாத் என்ற கிராமத்தில் ரிச்சர்ட் மற்றும் இசபெல்லா ஆகியோருக்குப் பிறந்த ஏழு ஆண் பிள்ளைகளும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ள குடும்பத்தில் நான்காவது மகனாகப் பிறந்தார்.
வாக்கர் தனது பள்ளி படிப்பை சாண்ட்ரிங்ஹோம் பள்ளியில் படித்தார். பக்தியுள்ள கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த அவர், சிறுவயதிலிருந்தே தேவபயத்துடன் வளர்ந்தார். 17வது வயதில் இவர் ஒரு வேதாகம வகுப்பில் கலந்து கொண்ட போது, அங்கு சொல்லப்பட்ட "கன்மலையின் மேல் கட்டுகிறவன் மற்றும் மணலின் மேல் கட்டுகிறவன்" உவமை அவரின் இருதயத்தை ஆழமாகத் தொட்டது. உடனே அவர் கர்த்தரிடத்தில் தன்னை ஒப்புக்கொடுத்தார்.
வாக்கரின் தந்தை தனது மகன் வியாபாரம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதனால் தந்தையின் விருப்பத்திற்கிணங்கி கணிதம் படிப்பதற்காக கேம்பிரிட்ஜிலுள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரிக்குச் சென்ற வாக்கர், அங்கு பக்தி, ஜெபம் மற்றும் முறையான வேத தியானம் போன்ற நல்ல பழக்கவழக்கங்களை தன்னில் வளர்த்துக் கொண்டார். அது அவருடைய எதிர்கால வாழ்க்கைக்கும் ஊழியத்திற்கும் அடித்தளமாக அமைந்தது.
வாக்கர் கணிதத்துடன் லத்தீன், கிரேக்கம், மற்றும் ஹீப்ரு ஆகிய மொழிகளையும் கற்றார். பின்னர் நான்கு மாதங்களுக்குள் அவர் தனது நியமன தேர்வுகளில் முதலிடம் பெற்றார். ஹாலோவேயில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் நகருக்குச் சென்றார். அங்குள்ள இரண்டு தேவாலயங்களில் ஊழியம் செய்தார். ஆனால் மிஷனெரியாக பணியாற்ற வேண்டும் என்ற வாஞ்சை வாக்கருடைய இருதயத்தை அதிகம் நிரப்பியது. அவர் ஆண்டவருடைய வார்த்தையை தியானித்த போது "மனுஷரை பிடிக்கிறவனாக மாற வேண்டும்" என்று தீர்மானித்தார். ஒருமுறை CMS-YMCA மூலமாக லண்டன் மாநகரில் நடைபெற்ற கூடுகையில் வாக்கர் கலந்து கொண்டார். யாத்திராகமம் 21:6-ஐ மையமாக வைத்து அன்று செய்தியளிக்கப்பட்டது. தேவன் வாக்கரோடு இடைப்பட்டார். குயவனின் கரத்தில் நம் இரு கைகளையும் வைக்க வேண்டும் என்ற செய்தியின் அடையாளமாக, "நான் எதையும் செய்யவும், எங்கும் செல்லவும் தயாராக இருக்கிறேன்" என்று தேவகரத்தில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தார்.
இதன் விளைவாக சர்ச் மிஷனெரி சொசைட்டியில் சேர்ந்த அவர் தின்னவேலிக்கு (திருநெல்வேலிக்கு) அனுப்பப்பட்டார்.
26 வயதான வாக்கர் 1885 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருநெல்வேலி மிஷன் களத்திற்கு வந்தார். வாக்கர் தனது முதல் ஐந்து வருடங்களை இந்தியாவில் சுவிசேஷப் பணியில் கழித்தார். அப்பொழுது பேராயராக இருந்த பிஷப் சார்ஜெண்ட் அவர்களுடன் தங்கி ஊழிய பணிகளை நிறைவேற்றி வந்தார். விடுமுறை நாட்களில் இருவரும் மலை பிரதேசத்திற்குச் சென்றனர். அங்கு 70 வயதான பிஷப் சார்ஜெண்ட், இவரிடம் ஹீப்ரு மொழியை கற்றுக் கொள்ள விரும்பினார். இதை பார்த்த மற்றவர்கள் வாக்கரை உயர்வாகப் பேசினார்கள். ஆனால் வாக்கர் தனது நாட்குறிப்பில், "நான் பிஷப் சார்ஜெண்டுடன் சேர்ந்து எனது ஹீப்ருவைத் திருத்திக் கொண்டிருக்கிறேன்" என்று எழுதியிருக்கிறார். இருவருக்கும் இடையே மோசே - யோசுவா போன்ற உறவு உருவானது. இந்த விடுமுறை நாட்களில் வாக்கர் அடர்ந்த காடுகளில் பாதை தெரியாமல் மாயமானார். அவரைக் கண்டுபிடிக்க தேடும் படையை அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது பிஷப் சார்ஜெண்ட் வாக்கரின் தாயாருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் "வாக்கரை என் மகனாகவே கருதுகிறேன்; அவரை CMS அனுப்பியது, ஆனால் அதற்கும் மேலாக தேவன் அவரை அனுப்பினார் என்பது மட்டுமே உண்மை. எனக்கு அவர் மிகவும் ஆறுதலாக இருக்கிறார்" என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். பின் ஒரு வழியாக வாக்கர் கண்டுபிடிக்கப்பட்டார்.
தனிமையில் இருப்பதே ஊழியத்திற்கு மிகவும் பொருத்தமானது என்று அவர் கருதினார். பின்னர் அவர் 1890 - ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சி.எம்.எஸ் மிஷனெரியாக இருந்த பெர்தா ஹாட்ஜை மணந்தார்.
1890 முதல் 1900 வரை உள்ள 10 ஆண்டுகள் இந்தியாவில் திருச்சபை ஊழியத்தை பொறுப்பெடுத்துச் செய்தார். வேதத்தின் அடிப்படையில் திருச்சபையை வழிநடத்த மிகவும் போராடினார். 40 வயதான வாக்கர் ஐயா, புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட சர்ச் கவுன்சிலின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவிசுவாசிகளை மிஷன் ஊழியர்களாக பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவர், மிஷன் பள்ளிகளில்கூட நற்சாட்சி உள்ளவர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும் என்று விரும்பினார். வாக்கர் பாரம்பரிய விளக்கங்களை கடைபிடிப்பதில் உறுதியாக இருந்தார். சாதி பிரிவினைகள், தேவாலய பதிவுகளில் சாதி பட்டங்களை பயன்படுத்துதல், நிதி முறைகேடுகள் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை சபையில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்ற வலுவான கருத்துக்களை கொண்டிருந்தார். இவரது இந்த செயல்களுக்கு கடுமையான எதிர்ப்புகள் எழும்பின. ஆண்டுகள் செல்லச் செல்ல அவர் எதிர் கருத்துக்களை சகித்துக் கொண்டாலும், கிறிஸ்தவர்களை மட்டுமே தேவாலய நிறுவனங்களில் பணியமர்த்தவும், மற்றவர்களை வெளியேற்றவும் அவர் முன்மொழிந்தார். ஆலயத்தில் விசுவாசிகள் மட்டுமே பணி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தடை செய்யப்பட்டபோது வாக்கர், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
வாக்கர் ஐயா, விடாமுயற்சியுடன் தமிழ் மொழியைக் கற்றார். பேச்சு வழக்குத் தமிழை பயன்படுத்தமாட்டார். பல ஆங்கில பாமாலைகளை தமிழில் மொழி பெயர்த்தார். இது தமிழர்கள், தங்களுக்கே சவாலாக கருதும் அளவிற்கு இருந்தது. அவருடைய கடின உழைப்பால் தமிழில் விரைவில் புலமை பெற்றார். அது மட்டுமல்ல, மொழியின் நுணுக்கங்களை பயன்படுத்துவதில் அவர் சிறந்து விளங்கினார். "கிறிஸ்தவர்களை எண்ணிக்கையில் உருவாக்காமல் நடமாடும் உண்மை கிறிஸ்தவர்களாக உருவாக்கினார்". வலுவான திருச்சபைகளை வசீகரத் தோற்றத்துடன் வானளாவ எழும்பினார். அநேகர் திருமுழுக்கு பெற்று கிறிஸ்துவின் மந்தையில் இணைந்தனர்.
வாக்கர் கிராமம் கிராமமாக நடந்தும், மாட்டு வண்டியில் சென்றும் ஊழியம் செய்தார். வாக்கர் இந்திய துணைக் கண்டம் முழுவதும் பயணம் செய்து சுவிசேஷம் செய்தார். சிலோன், பம்பாய், ஹூக்ளி, முசூரி என பல இடங்களுக்கு பயணம் செய்தார். என்றாலும், கிராமப்புற மக்கள் மற்றும் குழந்தைகளுக்காகவும் நேரம் ஒதுக்கி சுவிசேஷத்தை அறிவித்தார். திருச்செந்தூர், பாளையங்கோட்டை, நாங்குநேரி, சிவகாசி போன்ற இடங்களிலும்கூட நற்செய்தி அறிவித்தார். இவரது அயராத சேவையால் கிறிஸ்துவின் ஒளியை கண்ட இடங்களில் பண்ணைவிளையும் ஒன்று. அவருக்கு பல எதிர்ப்புகள் வந்த போதிலும் கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவதில் அவர் வெற்றியும் பெற்றார். மேலும் அவர் கோவில்களில் தேவதாசியாக விடப்பட்ட சிறுவர்கள் மத்தியில் பணியாற்றுகிற தனது சக மிஷனெரியான ஏமி கார்மைக்கேல் அம்மா அவர்களையும் அந்த ஊழியத்தில் ஊக்குவித்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து டோனாவூரில் ஒரு பள்ளியையும், டோனாவூர் பெலோஷிப் என்ற அமைப்பையும் நிறுவினார்கள். இதன் மூலம் அந்த இடம் ஒரு கிறிஸ்தவ சமூகமாக மாறியது. இளம் பெண்களுக்கு பாதுகாப்பான அடைக்கலப்பட்டணமாக மாறியது.
வாக்கர் அசாதாரண ஒருமைப்பாடு மற்றும் ஆவிக்குரிய விஷயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட மனிதர். ஒருமுறை மார்வென் மாநாட்டில் அவர் கொடுத்த பிரசங்கங்கள் கேரளா மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ திருச்சபைகளில் எழுப்புதலை கொண்டு வந்தன. வாக்கர், சீரிய கிறிஸ்தவர்களிடையே புதிதாக உருவாகிய சுவிசேஷ இயக்கத்திற்கு ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் இருந்தார். அவருடைய பிரசங்கங்கள் மார்த்தோமா தேவாலயத்தில் ஆழமான ஆவிக்குரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளைச் சார்ந்தவர்களும் கூட வாக்கரின் பிரசங்கத்தை கேட்க ஆவலோடு கூடினார்கள். ஒரு நாளில் இவர்கள் வாக்கரின் ஊழியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்; ஆனால் தற்போது, அவருக்கு உறுதுணையாக நின்றார்கள். பின்னாட்களில் இவை பல்வேறு இயக்கங்களாக உருவாகக் காரணமாக அமைந்தது.
வாக்கர் அதிக நேரங்களை தனிஜெபத்தில் கழித்தார். தன்னுடைய ஜெபம், வேத தியானம் மற்றும் கிறிஸ்துவை பிரசங்கிக்கும் சமயங்கள் போன்ற நேரங்களில் தன்னையே மறந்து விடுவதுண்டு. கிறிஸ்துவின் அன்பு தன்னை உண்மை நிலையில் வாழ வைத்ததாக எழுதியுள்ளார். தாமஸ் வாக்கர் தனது உடன் ஊழியர்கள் மற்றும் சக மிஷனெரிகளை அதிகம் நேசித்தார். அவர்களின் வருகைக்காக தன்னுடைய வேலைப்பளுவிலும் ரயில் நிலையத்தில் பல மணி நேரங்கள் அவர்களுக்காக காத்திருப்பார். ஆங்கில அதிகாரிகளுடன் சமூக நிகழ்வுகளில் பங்கேற்க பலமுறை அவருக்கு அழைப்பு வந்த போதும் அதில் அதிகம் நாட்டம் கொள்ளாமல் தவிர்த்தார். ஆனால் அவர்களை வெறுக்காமல் அவர்களுக்காக தனது வீட்டை திறந்தே வைத்திருந்தார்.
பல மிஷனெரிகளுக்கு ஊக்கமாக இருந்த "திருநெல்வேலி வாக்கர்" என்று அழைக்கப்படும் தாமஸ் வாக்கர், "கர்த்தருக்காக மனுஷர்களை பிடிக்கிறவராக இந்த உலகில் தனது சேவையை வெற்றிகரமாகச் செய்தார்". தனிப்பட்ட வாழ்க்கையில் பல போராட்டங்களையும் சந்தித்தார்.
அவரது மனைவி உடல்நிலை மோசமானதால் இங்கிலாந்துக்கு திரும்பி செல்ல வேண்டியிருந்தது. இரண்டாவது விடுமுறையிலாவது மனைவியை அழைத்து வர விரும்பினார். ஆனால் அவர் குணமடையாததால் அழைத்து வரவில்லை. தனிமையிலேயே ஊழியத்தைச் செய்தார். ஒருமுறை தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், "பிரிந்து வாழ்வது சுலபமல்ல; ஆனால் தேவனின் பணி அதிமுக்கியமானது தானே இல்லையா?" என்று குறிப்பிட்டு இருக்கிறார். அவர் அடிக்கடி ஒரு மிஷனெரி பெண் கூறும், "வாழ்க்கையின் திசை திருப்பங்களில் நான் பங்கேற்பதில்லை; ஏனெனில் கிறிஸ்து மட்டும் போதும்" என்ற கூற்றை நினைவுகூருவார். இது ஒரு கடினமான காரியமானாலும், கிறிஸ்துவின் பெலன் அவரை அதிகம் நிரப்பியது. அவரின் ஜெப வாழ்க்கையே அவரது அனைத்து செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக இருந்தது.
விடுமுறைக்கு இங்கிலாந்து சென்று இந்தியா வந்ததும் மச்சிலிப்பட்டணத்தில் ஊழியத்தைத் தொடர்ந்தார். கடினமான ரயில் பயணத்தால் மிகவும் சோர்வடைந்திருந்தாலும், ஓய்வு எடுக்காமல் பிரசங்கம் செய்து வந்தார். அங்கு கடுமையான காலரா நோய் அவரைத் தாக்கி உடல்நிலை மோசமானது. 53 வயதான தாமஸ் வாக்கர் ஆகஸ்ட் 24, 1912 - இல் மரணமடைந்தார்.
தாமஸ் வாக்கரின் ஒழுக்கம், அர்ப்பணிப்பு, கிறிஸ்துவின் மீதுள்ள அன்பு அவரை ஒரு முழுமையான வாழ்க்கை வாழ செய்தது. வாக்கர் எண்ணிக்கையில் கிறிஸ்தவர்களை உருவாக்காமல் உண்மையான கிறிஸ்தவ சீடர்களாக அநேகரை கிறிஸ்துவண்டை வழிநடத்தினார். தாமஸ் வாக்கரின் வாழ்வு குறுகியதாக இருந்தாலும், அவற்றில் அவர் பின்பற்றிய ஒழுக்கம், தனிப்பட்ட ஜெப நேரம், கிறிஸ்துவை முன்னிறுத்தி வாழ்ந்த வாழ்வு அவரை சரித்திரத்தில் இடம் பெயரச் செய்தது.
நாமும் எண்ணிக்கையில் கிறிஸ்தவர்களாக ஜனங்களை வழி நடத்துவதை தவிர்த்து விட்டு, கிறிஸ்துவின் அன்பை அவர்கள் உணரும்படியாக அவர்கள் தங்கள் இருதயத்தில் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டு, வாழ்வில் மாற்றம் அடையும்படியாக ஒரு நடமாடும் சாட்சியாக கிறிஸ்துவண்டை வழிநடத்த அர்ப்பணிப்போம்.
Comments
Post a Comment