பக்த்சிங் Bakht Singh

  


2000 -ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் நாள் ஹைதராபாத் நகரமே ஸ்தம்பித்தது. ஹெப்ரோன் வளாகம் முதல் சிக்கடப்பள்ளி மயானம் வரை மக்கள் கூட்டம் கடல் போல் இருந்தன. அன்று மட்டும் சுமார் 2 1/2 இலட்சம் கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. கூட்டங்களைக் கட்டுப்படுத்த போலீஸாரின் போராட்டமும் பலனளிக்கவில்லை. மூன்று கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க சுமார் 3 மணி நேரங்கள் ஆனது. அடக்க ஆராதனை மக்கள் தேவனைத் துதிக்கும் விழாவாகக் காட்சியளித்தது. இறுதி ஊர்வலத்தில், அன்னாரது உயிரற்ற சடலத்தை மக்கள் மரங்களிலும், வீட்டு கூரைகளிலும் ஏறி நின்று காணத் துடித்தனர். அவர் மரித்த செப்டம்பர் 17 - ஆம் தேதியன்று காலை 6:05 மணிக்கு ஹைதராபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அசாதாரணமான இடி மற்றும் மின்னல்களுடன் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. விளக்குகள் அணைந்து சிறிது நேரம் நகரம் முழுவதையும் இருள் சூழ்ந்தது. அவரை அடக்கம் பண்ணும் செப்டம்பர் 22 - ஆம் நாளன்று, வானவில் ஒன்று சூரியனைச் சுற்றி வந்தது. சிறிது நேரத்தில் வானவில் மறைந்தபின், கிரீடம் போன்ற ஒளிரும் வளையம் ஒன்று சூரியனை சுற்றி தோன்றியது. இறுதி ஊர்வலத்தின் போது ஹெப்ரோன் வளாகத்தின் மீது எண்ணற்ற புறாக்கள் பறந்தன. இந்தியா மட்டுமின்றி, உலகமுழுவதிலுமிருந்து சுமார் 6 இலட்சம் மக்கள் ஒன்று திரண்டு வந்தனர். இதுவரை இப்படியொரு இறுதி ஊர்வலத்தை ஹைதராபாத் மாநகரம் கண்டதில்லை. அவரது மரணம் ஒரு சகாப்தத்தையே முடிவிற்கு கொண்டு வந்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். யார் அவர்?

         அவர் பெயர் பக்த் சிங். அறியப்படாதவராகவே சுமார் 70 ஆண்டுகள் தேவனுடைய ஊழியத்தைச் செய்தாலும், இலட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளார். எனினும் எப்படி இத்தனை அன்பு, மரியாதை, கண்ணீர் என அவரது வாழ்க்கை பற்றி சிந்திக்கவும் வைக்கிறது. அவருடைய வாழ்க்கையும், ஊழியமும் இயேசு கிறிஸ்துவை போலவும், அப்போஸ்தலனாகிய பவுலைப் போலவும் இருந்ததை நாம் புரிந்து கொள்ளலாம். உலகெங்கிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளின் ஆவிக்குரிய தகப்பனாகவும், புதிய ஏற்பாடு கொள்கைகளின் அடிப்படையில் பல ஆலயங்களை நிறுவியும் உள்ளார். எபேசியர் 4:11-இல் கூறப்பட்டுள்ள ஐந்து வரங்களையும் தேவன் இவருக்கு கொடுத்து, இவரை தம்முடைய நாமம் மகிமைகென வல்லமையாய் பயன்படுத்தி உள்ளார். சாதாரண மனிதனாக இருந்த இவருக்கும் பல குறைபாடுகளும் பெலவீனங்களும் இருந்தன. என்றாலும் அவருடைய ஆவிக்குரிய பலம் அவரது பெலவீனங்களை விட அதிகமாக இருந்தது. அவரை பற்றி தொடர்ந்து வாசிப்போம்.

1903 - ஆம் ஆண்டு பக்த்சிங் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய குடும்பப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப் பருவத்தை கிறிஸ்தவ பள்ளியில் பயின்றார். ஆனால் கிறிஸ்தவர்கள் மேல் ஒரு இனம் புரியாத வெறுப்பு அவருக்குள் இருந்தது. அதனால் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களையே தன் நண்பர்களாகக் கருதினார். கிறிஸ்தவர்களுடன் பேசுவதை விரும்பவில்லை. பள்ளிப் படிப்பை முடிக்கும் போது, பள்ளியில் அவருக்கு அன்பளிப்பாகக் கிடைத்த தோள் உரையைக் கொண்ட வேதாகமத்தை துண்டு துண்டாக கிழித்துப் போட்டார். தோள் உரையை மட்டும் பத்திரமாக வைத்துக் கொண்டார். சீக்கிய கோவில்களுக்கு அடிக்கடிச் சென்று வழிபட்டு வந்தார். சமூக சேவையிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். எனினும் உண்மையான சந்தோஷமும் சமாதானமும் அவர் உள்ளத்தை நிரப்பவில்லை. அதனைத் தேடி ஒவ்வொரு இடமாக அலைந்து வந்தார்.

இதற்கிடையில் கல்லூரிப் படிப்பை இங்கிலாந்தில் சென்று பயில விரும்பினார். பெரிய தொழிற்சாலைக்குச் சொந்தக்காரரான அவரது தந்தை, தன் தொழிற்சாலையில் சேரக் கூறினார். ஆனால் பக்த்சிங், தான் கட்டாயம் இங்கிலாந்து செல்ல வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். அவரது தாயோ, எக்காரணத்தைக் கொண்டும் தனது மதத்தை மாற்ற மாட்டேன் என்றால் மட்டுமே இங்கிலாந்துக்கு செல்ல அனுமதிப்பதாகக் கூறினார். அவரும் சம்மதிக்கவே, பெற்றோர் அதிக பணம் செலவழித்து இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தனர்.

1926 - ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்தை அடைந்த பக்த்சிங், லண்டன் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார். பிரிட்டிஷ் நாகரீகமும், பழக்கவழக்கங்களும் பக்த் சிங்கை அதிகம் கவர்ந்தது. ஆகவே சீக்கியக் கொள்கையை மீறி, தன்னுடைய தலைமுடியை வெட்டி தன்னை அழகுபடுத்தினார். ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தின் பல இடங்களுக்கும் சென்று, அருங்காட்சியகங்கள் மற்றும் கலைப் பொருள்களை பார்வையிட்டும் விலையுயர்ந்த உடைகளை அணிந்தும், சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் தன் நாட்களைக் கழித்து வந்தார். பலவிதமான பழக்கங்களைக் கொண்ட நபர்களை தன் நண்பர்களாக சேர்த்துக் கொண்டார். என்றாலும் அவையொன்றும் அவரை திருப்திபடுத்தவில்லை. தான் முழுமையான நாகரீகமாக இல்லாததால் தான் மகிழ்ச்சியாய் இல்லையோ என்று சிந்தித்தார். தன் நண்பர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரிடம் "நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களா?"என்று கேட்டார். அவர்களும் யாரும் முழுமனதோடு ஆம் என்று கூறவில்லை. இந்த உலகத்தில் "வெறுமையான வெறுமைகள்" நிரம்பியிருப்பதாக அவர் முடிவு செய்தார்.

1928 - ஆம் ஆண்டில் கனடாவிற்கு புறப்பட்ட மாணவர்களின் குழுவில் சேர தன்னை இணைத்துக் கொண்டார். ஆகஸ்ட் 10 - ஆம் தேதி கனடாவை அடைந்தார். ஒருநாள் மதியம் ஒரு முதல் வகுப்பு உணவகத்தில் ஆலய ஆராதனை நடக்கும் அறிவிப்பைக் கண்டார். தன் நண்பர்களுடன் செல்ல நினைத்தார். ஆனால் இதற்கு முன் இங்கு செல்லாததால் அவருக்குள் ஒரு பயம் ஏற்பட்டது. ஆனாலும் சென்றார். ஆலயத்தில் ஒவ்வொருவரின் வழிபாடுகளை உற்று கவனித்தார். பின் "இவர்கள் மதம் வீண், என் மதமே சிறந்தது" என்று எண்ணினார். அவரது வலது பக்கத்தில் ஒருவரும், இடது பக்கத்தில் ஒருவரும் மண்டியிட்டு இருப்பதைப் பார்த்தார். சிறிது நேரத்தில் பக்த்சிங் தன்னைத் தாழ்த்தி மண்டியிட்டார். திடீரென அவருக்குள் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அவரது உடல் நடுங்க ஆரம்பித்தது. உள்ளமோ மகிழ்ச்சியாலும், சமாதானத்தாலும் நிரம்பியது. பின்னர் "இயேசுவே வாழ்க, வாழ்க" என்று அவரது உதடுகள் சொல்ல ஆரம்பித்தது. அவரையும் அறியாமல் அவரது உள்ளமும் துடிக்க ஆரம்பித்தது. 

இந்த அனுபவத்திற்கு பின், பக்த்சிங் ஒவ்வொரு நாளும் ஆலயம் செல்வதை வழக்கமாக்கி கொண்டிருந்தார். ஒரு வருடம் கடந்தது. தனது மாற்றம் பற்றி எவரிடமும் பேச தைரியமின்றி இருந்தார். புகைபிடிப்பதையும், மது அருந்துவதையும் நாடி அவர் செல்லவில்லை. மாறாக அவைகள் அவரை வெறுப்படையச் செய்தது. உலகின் சுகங்களை விரும்பும் எண்ணங்கள் அவரை விட்டு மறைந்தது. 1929 - ஆம் ஆண்டு டிசம்பர் 14 - ஆம் தேதி தன் நண்பனிடம் தனக்கொரு வேதாகமம் கேட்டார். இது அவரது நண்பருக்கு ஆச்சரியமாக இருந்தது. மிக்க மகிழ்ச்சியுடன் ஒரு சிறு புதிய ஏற்பாட்டை வழங்கினார். அதை தன் வாழ்வின் இறுதிவரை பத்திரமாக வைத்திருந்தார். அடுத்த நாள் யோவான் முதலாம் அதிகாரத்தை வாசித்துக் கொண்டிருந்தபோது, "மெய்யாகவே, மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன்" என்ற வார்த்தைகள் அவரோடு பேசியது. "தான் ஒரு பெரிய பாவி" என்று உணர்ந்தார். கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. ஒரு மென்மையான குரல், "இது உனக்காக உடைக்கப்பட்ட என் உடல்; உன் பாவங்களுக்காக சிந்தப்பட்ட என் இரத்தம்" என்று கேட்டது. இயேசுவின் இரத்தம் மட்டுமே பாவங்களைக் கழுவும் என்பதை அறிந்து கொண்டார். அளவற்ற மகிழ்ச்சியும் சமாதானமும் அவரது உள்ளத்தை ஆளுகை செய்தது. அன்று தனது அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டதை உணர்ந்தார். கிறிஸ்துமஸ் நாளன்று முழு வேதாகமம் ஒன்றை அன்பளிப்பாகப் பெற்றார். சில நேரங்களில் 14 மணி நேரங்கள் தொடர்ந்து வேதத்தை படித்தார். 1932 - ஆம் ஆண்டு பிப்ரவரி 4 - ஆம் தேதி பக்த்சிங் கனடாவில் ஞானஸ்நானம் பெற்றார். அதன் பின் தன் தந்தைக்கு தன் மாற்றத்தை தெரியப்படுத்தி ஒரு கடிதம் எழுதினார். அநேக வேத வசனங்களை அதில் குறிப்பிட்டிருந்தார். அந்நாட்களில் அவரது தந்தையின் கரங்களிலும் ஒரு உருது வேதாகமம் இருந்தது. கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வேத வசனங்களைப் படித்தவுடன் தன் மகன் உண்மையான மாற்றம் பெற்றிருக்கிறான் என்பதை புரிந்து கொண்டார். பின்னாட்களில் அவரும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார். 

தேவன் அவரிடம் மூன்று காரியங்களை முன் வைத்தார்.  

* எந்த இயக்கத்திலும் முழு நேரமாக இணைந்து பணி செய்யாமல் அனைவருக்கும் சமமாக பணி செய்.

* உன் சுய விருப்பத்தின்படி திட்டங்களை தீட்டாதே. நீ செய்ய வேண்டிய ஊழியங்கள் ஒவ்வொன்றிலும் நான் உன்னை வழி நடத்துவேன்.

* உன் தேவைக்காக மனிதர்களை நாடி தேடாதே. நீ என்னிடம் கேட்கும்போது நான் உன் தேவைகளைச் சந்திப்பேன். 

          பக்த்சிங் தேவனின் திட்டத்தை ஏற்றுக் கண்டு தேவனையே முழுவதும் சார்ந்து வாழ ஆரம்பித்தார். 1933 - ஆம் ஆண்டு பக்த்சிங் இந்தியா வந்தார். ஆனால் பெற்றோர்கள் அவரை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதை இரகசியமாக வைக்கும்படி வற்புறுத்தினர். பக்த்சிங் அவற்றை ஏற்றுக்கொள்ளாததால் பெற்றோர்களால் துரத்தப்பட்டார். வீடின்றி தனிமையில் இருந்தாலும், உள்ளத்தில் இயேசு கிறிஸ்துவின் அன்பு நிரம்பி வழிந்தது. இதன் பின்பு மும்பையின் தெருக்களில் துணிந்து பிரசிங்கத்து வந்தார். இவரது அன்பான வார்த்தைகளைக் கேட்டு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர். அவர் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. அற்புதங்களும் அடையாளங்களும் நடக்க ஆரம்பித்தன. இந்தியாவின் பல இடங்களில் தேவாலயங்களை ஸ்தாபித்தார்.

1937 - ஆம் ஆண்டு சியால்கோட் மாநாட்டின் முக்கிய பேச்சாளராக அழைக்கப்பட்டார். இம்மாநாடு முதன்மையான திருச்சபை பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. பக்த்சிங் லூக்கா 20:5 - லிருந்து தேவ செய்தியளித்தார். உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? என்ற வசனத்திலிருந்து பேசிய தேவ வார்த்தைகள் மக்கள் உள்ளத்தை அசைத்தது. மக்களை மட்டுமல்ல, திருச்சபைத் தலைவர்களையும் சிந்திக்க தூண்டியது. பிரிட்டிஷ் சர்ச் வரலாற்றாசிரியர் டாக்டர் ஜே எட்வின், பக்த்சிங் "மேலை நாட்டு மிஷனெரிகளுக்குச் சமமானவர். சார்லஸ் ஃபின்னியிடமுள்ள திறமை மற்றும் டி.எல் மூடியிடமுள்ள நேர்மை ஆகியவற்றைக் கொண்டவர். முதல் தரமான வேத ஆசிரியர்" என்று கூறுகிறார். விரைவில் பக்த்சிங் ப்ரொட்டஸ்டண்ட் குடும்பத்தின் அங்கமானார்.

1938 - ஆம் ஆண்டு சென்னை பட்டணத்திற்கு வந்தார். பின்பு கேரளா மற்றும் தென் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேவனுடைய ஊழியத்தைச் செய்து வந்தார். 1941 - ஆம் ஆண்டு ஜூலை 12 - ஆம் தேதி யெகோவா ஷம்மா என்ற முதல் தேவாலயத்தை சென்னை பட்டணத்தில் ஸ்தம்பித்தார். தேவன் அவரது ஊழியத்தை கனம் பண்ணி சபைகளைப் பல மடங்காகப் பெருகப் பண்ணினார். இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் இவர் மூலம் திருச்சபை ஸ்தாபிக்கப்பட்டது. பக்த்சிங் இந்தியா மற்றும் வெளிநாட்டிலுள்ள சுயாதீன தேவாலயங்களின் தந்தை என்று அழைக்கப்பட்டார். 

கராச்சியிலும், பஞ்சாபின் மற்ற பகுதிகளிலும் சில வருடங்கள் சுவிசேஷகராக பணியாற்றினார். பின் தேவன் மார்ட்டின்பூர் (தற்போது பாகிஸ்தான் பகுதி) மற்றும் பஞ்சாபின் பிற இடங்களில் அவர் மூலம் பெரிய எழுப்புதலைக் கொண்டு வந்தார். இருந்தபோதிலும் தேவனின் அழைப்பிற்கு கீழ்ப்படியும் போது அவர் பல பாடுகளையும்,போராட்டங்களையும் சந்தித்தார். ஆனாலும் தேவ கரம் அவரோடிருந்து அவரை தாங்கியது.

1950 - ஆம் ஆண்டு செப்டம்பர் 25 - ஆம் நாள் ஹைதராபாத் பட்டணத்தை தலைமையிடமாக வைத்து ஊழியத்தை ஆரம்பித்தார். தேவன் அவரை ஆசீர்வதித்தார். தேவன் தந்த புதிய இடத்திற்கு ஹெப்ரோன் என்று பெயரிட்டார். ஊழியம் வளர்ச்சியடைந்து பலுகிப் பெருகியது. 1950 முதல் 1970 வரையுள்ள காலங்களில் பக்த்சிங் மற்றும் அவருடன் பணிபுரிந்த ஊழியர்கள் மூலம் உள்ளூர் திருச்சபைகள் இந்தியா முழுவதிலும் பரந்து விரிந்தது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல பாகங்களிலும் சபைகள் உருவாகின. இந்தியாவில் இவருடன் பணியாற்ற அநேக இளம் ஊழியர்கள் எழும்பினார்கள். ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 400 இடங்களிலிருந்து இவர் பிரசங்கம் செய்ய அழைப்பு வந்தது. திறந்து வெளியிடங்களில் நடத்தப்பட்ட கூடுகைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர். சுகவீனமானவர்கள் சுகம் பெற்றனர். அற்புத அடையாளங்கள் அநேகம் தேவன் இவர் மூலம் செய்தார். தேவ் ஹண்ட் என்ற கிறிஸ்தவ எழுத்தாளர் தனது புத்தகத்தில், "பக்த்சிங்கின் வருகை சென்னை பட்டணத்தின் திருச்சபைகளைத் தலைகீழாக மாற்றியது" என்று எழுதியுள்ளார். 1970 - ஆம் ஆண்டுக்குப் பின்வரும் ஆண்டுகளில் இவரது ஊழியம் உலகமெங்கும் பரவியது. பக்த்சிங் செல்லாத நாடுகளே கிடையாது என்று கூறலாம். தேசமெங்கும் சுமார் 10,000 உள்ளூர் திருச்சபைகள் இயங்கி வருகிறது. தேவன் பக்த்சிங்கை வல்லமையாக பயன்படுத்தினார். தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் தனித்துவமாக விளங்கினார். அவற்றில் சில...

* தேவனையே முழுவதுமாக சார்ந்து வாழ்ந்தார்.

* வேதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஒவ்வொரு விசுவாசியும் தனக்கென ஒரு வேதாகமத்தை வைத்திருக்க வேண்டும். வேத அறிவில் பக்த்சிங் போன்ற ஒரு மனிதரை இதுவரை நாங்கள் கண்டதில்லை என்று அநேக மூத்த ஊழியர்கள் கூறுகின்றனர்.

* எந்த நிலையிலும் கிறிஸ்துவின் சித்தத்தின் மையத்தில் வாழ்ந்தார்.

* தேவன் மீது அளவற்ற அன்பும், ஆத்துமாக்கள் மீது அதிக வைராக்கியமும் கொண்டவர்.

* கிறிஸ்துவை ஆவியோடும் உண்மையோடும் ஆராதித்தவர். மற்றவர்களையும் அவ்வாறு ஆராதிக்க கற்றுக் கொடுத்தார்.

* கிறிஸ்தவ விசுவாசிகளின் ஐக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். 

* உள்நாட்டு திருச்சபைகளை புதிய ஏற்பாட்டின் அடிப்படைகளை உள்ளவைகயாக மாற்றுவதில் அதிக கவனமாக இருந்தார். 

* விசுவாச வாழ்வு : தனது தேவைகள் அனைத்திலும் தேவன் மீது விசுவாசம் கொண்டிருந்தார். மனிதர்களிடம் தனது தேவையை கூறாமல் தேவனிடம் மட்டுமே தெரியப்படுத்தினார். தேவனும் அவரது விசுவாசத்தை கனம் பண்ணி அவருடைய தனிப்பட்ட மற்றும் ஊழியத் தேவைகளை சந்தித்தார். விசுவாசிகளிடமும் பகத்சிங் விசுவாசத்தைப் பற்றி சவால் விடுகிறார். விசுவாசத்தால் அனைத்தையும் சாதித்தார்.

* அவர் நடத்தும் ஒவ்வொரு கூட்டங்களிலும், அப்பட்டணத்தை சுற்றி சுவிசேஷ பேரணி நடத்துவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அதன் மூலம் அவ்விடங்களில் கிறிஸ்து கிரியை செய்து நகரமே தலைகீழாக மாற்றப்படும். இப்பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். 

* பக்த்சிங் சிறந்த ஜெப வீரர். தேவனுடைய பாதத்தில் பல மணி நேரங்கள் முழங்காலில் காத்துக் கொண்டு இருப்பார். தேவசித்தம் தன் ஊழியத்திலும் பணியிலும் விளங்க வேண்டும் என போராடியவர். தேவன் அவரை கனம் பண்ணி, மனிதர்களால் கிரகிக்க கூடாதவாறு பெரிய பெரிய காரியங்களை செய்தார். இதுவே தேவன் அவரை வளமையாக பயன்படுத்தியதன் முக்கிய இரகசியங்களாகும்.

பக்த்சிங் தன்னுடைய 97 - ஆம் வயதில் 2000 - ஆம் ஆண்டு செப்டம்பர் 17 - ஆம் நாள் தேவ இராஜ்யம் சென்றார். ஆனால் அவர் விட்டுச் சென்ற பணிகள் இன்றும் தொடர்ந்து வருகிறது. அதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் வாழ்வு மாற்றம் பெற்று வருகின்றனர். சுமார் 60 ஆண்டுகள் இடைவிடாது ஒவ்வொரு நாடுகளுக்கும் பயணமானார். இந்தியாவில் சுமார் 6000 சுயாதீன திருச்சபைகளையும் பாகிஸ்தான், இலங்கை, மற்றும் ஆஸ்திரேலியா என மொத்தம் 10,000 திருச்சபைகளை உருவாக்கினார். சுவிசேஷ பேரணியில் கூடின கூட்டங்களைக் காட்டிலும் அவரது அடக்க ஆராதனையில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர்.

 தேவனிடம் தன்னைத் தாழ்த்தி, அவருக்குக் கீழ்ப்படிந்த ஒரு தனி மனிதன் மூலம் தேவன் அசாதாரண காரியங்களை செய்தார். இதை வாசிக்கும் நம் ஒவ்வொருவரும் தேவனுக்கு கீழ்ப்படிந்து, அவரிடம் அர்ப்பணிக்கும் போது தேவன் நம்மையும் பயன்படுத்த வல்லவர். தேவனிடம் அர்ப்பணிப்போமா?

Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!