ஜிம் எலியட் & எலிசபெத் எலியட் Jim Elliot and Elisabeth Howard Elliot



நான் ஆண்டவருக்காக தன்னலமற்ற வாழ்க்கை வாழ்வதற்கு எனது ஆற்றல் மற்றும் வலிமை அனைத்தையும் அர்ப்பணிக்கிறேன். இது ஒன்றே எனது வாஞ்சை!

– ஜிம் எலியட்

ஜிம் எலியட் அமெரிக்காவில் ஓரிகன் மாநிலத்திலுள்ள போர்ட்லன்ட் என்ற பட்டணத்தில் பிரட் எலியட் மற்றும் கிளாரா தம்பதியருக்கு 1927 - ஆம் ஆண்டு அக்டோபர் 8 - ஆம் நாள் மூன்றாவது மகனாக பிறந்தார். இவரது பெற்றோர் பல இடங்களுக்குச் சென்று பிரசங்க ஊழியம் செய்து வந்தனர். ஜிம் எலியட் தனது சிறுவயதிலேயே கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார். இவரது பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கிறிஸ்தவ விசுவாசத்தைக் குறித்து போதித்ததோடு கீழ்ப்படிதலையும் நேர்மையையும் அவர்களுக்கு அதிகமாக வலியுறுத்தினர்.

தனது சிறுவயதிலேயே பேச்சாற்றல் கொண்ட ஜிம் எலியட் கிறிஸ்துவைப் பற்றி பேசவேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தார். தனது கல்லூரி படிப்பின்போது எந்தவொரு சபையையும் சாராமல் விசுவாசத்தோடு மிஷனெரி ஊழியம் செய்ய வேண்டுமென உந்தப்பட்டார். 1947- ஆம் ஆண்டு மெக்சிகோ சென்று 6 வாரங்கள் அருட்பணியாற்றினார். ஒருமுறை சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட ஜிம் எலியட் அங்கு பிரேசில் நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு அருட்பணியாளரைச் சந்தித்த பின்பு தென் அமெரிக்காவில் ஊழியம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் அவருக்குள் வலுப்பெற்றது.

தென் அமெரிக்காவில் க்யூசுவா பழங்குடியினர் மத்தியில் ஊழியம் செய்துவந்த ஒரு அருட் பணியாளரோடு சேர்ந்து புதிய மொழிகளுக்கு வடிவம் கொடுக்கும் பயிற்சியில் ஈடுபட்டார்.

அப்போதுதான் ஹ்யூவரானி என்ற பழங்குடியினரைக் குறித்து முதன் முதலாக கேள்விப்பட்டார். இவர்கள் மிகவும் கொடூரமானவர்களாக இருந்தபடியால் க்யூசுவா படிங்குடியினர் இவர்களை ஆக்கா (Aucas) என்று அழைத்தனர். எந்த வெளிநாட்டினரும் அவர்களிடத்தில் சென்று திரும்பினதில்லை. இப்பழங்குடியினர் ஈக்குவேடார் நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதியில் வசித்து வந்தனர்.

பல அருட்பணி மாநாடுகளில் ஜிம் கலந்து கொள்ளும்போது தத்துவப் பட்டம் பெற்ற பீட்டர் பிளமிங் என்பவரை அடிக்கடி சந்தித்தார். இவர்கள் இருவரும் நண்பர்களாயினர். 1952 - ஆம் ஆண்டு ஜிம் எலியட்டும் பீட்டர் பிளமிங்கும் இணைந்து ஈக்குவேடார் நாட்டிற்குப் புறப்பட்டனர். ஜிம் எலியட் 1953 - ஆம் ஆண்டு அக்டோபர் 8 - ஆம் நாள் தன்னுடன் கல்லுரியில் பயின்ற எலிசபெத்தை திருமணம் செய்துகொண்டார். 1955 - ஆம் ஆண்டு இவர்களுக்கு வேலரி என்ற மகள் பிறந்தாள்.

ஜிம் எலியட்டிற்கு எட் மெக்கல்லி என்ற நெருங்கிய நண்பர் உண்டு. இவர் 1952 - ஆம் ஆண்டு டிசம்பர் 10 - ஆம் நாள் தனது மனைவி மேரிலோவோடும் எட்டு மாத குழந்தை ஸ்டீவுடனும் ஈக்குவேடாருக்கு Christian Missions in Many Lands என்ற ஊழிய அமைப்பின் சார்பில் அருட்பணியாளராகச் சென்றார். முதலில் சில நாட்கள் குயிட்டேவில் தங்கி ஸ்பானிய மொழியைக் கற்ற பின்னர் ஷாண்டியாவிலிருந்த ஜிம் எலியட் மற்றும் பீட்டர் பிளமிங்கோடு சேர்ந்து கொண்டார்கள். இவர்கள் மூவரும் அராஜூனா அருட்பணி மையத்தில் தங்கி க்யூசுவா பழங்குடிகள் மத்தியில் ஊழியத்தைத் துவங்கினார்கள். இங்கு எட் மெக்கல்லி – மேரிலோ தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தைப் பிறந்தது.

ஜிம் எலியட்டுடன் நான்காவதாக இணைந்து கொண்டவர் நேட் செயிண்ட் ஆவர். தனது 19 - ஆம் வயதில் இராணுவத்தில் சேர்ந்தார். இரண்டாம் உலகப் போரின்போது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் இராணுவப் பணியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. மார்ஜோரி என்ற பெண்மணியை திருமணம் செய்த நேட், 1948 - ஆம் ஆண்டு இருவரும் ஈக்குவேடார் நாட்டிற்கு பயணமானார்கள். ஷேல்மேரா என்ற இடத்தில் ஒரு சிறிய விமானத்துக்கான விமான தளத்தை உருவாக்கிய இவர் பல இடங்களிலும் ஊழியம் செய்துவந்த அருட்பணியாளர்களுக்குத் தேவையான மருந்து பொருட்களை விமானத்தில் கொண்டு செல்லும் ஊழியத்தில் ஈடுபட்டார். இவர் மற்ற ஊழியர்களுக்காக விமானத்தை ஓட்டிவந்தாலும் தானும் நேரடியாகப் பழங்குடிகள் மத்தியில் ஊழியம் செய்யவேண்டும் என்ற வாஞ்சை உடையவராயிருந்தார். தென் அமெரிக்காவிலேயே மிகவும் கொடூரமான மக்களான ஆக்கா என்றழைக்கப்பட்ட ஹ்யூவரானி பழங்குடியினருக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதே இவருடைய விருப்பமாக இருந்தது. இதே தரிசனத்தோடு அருட்பணி ஆற்றிவந்த ஜிம் எலியட் குழுவினரோடு நான்காவது நபராக இணைந்து கொண்டார்.

ரோஜர் யூடெரியன் என்ற அருட்பணியாளரும் அவரது மனைவியான பார்பரா ஓர்டனும் தங்களது சிறு மகள் பெத்துவோடு 1953 - ஆம் ஆண்டு அருட்பணிக்கென்று ஈக்குவேடார் வந்தனர். இவர்கள் ஷூவார் பழங்குடியினர் மத்தியிலும் அச்சுவார் என்ற பழங்குடியினர் மத்தியிலும் அருட்பணியாற்றி வந்தனர். இவர்கள் ஊழியத்தில் அதிகமான கனிகளைக் காண இயலாததால் சோர்வுற்று திரும்பவும் அமெரிக்காவிற்கு திரும்பி செல்ல முடிவெடுத்தனர். அந்நிலையில் தேவையான மருந்து பொருட்களைக் கொடுக்கும்படி ஒரு சிறிய விமானத்தை இயக்கிவந்த விமானியான நேட் செயிண்ட் நண்பரானார். ஹ்யூவரானி பழங்குடியினருக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு குழுவாக ஆயத்தம் செய்துவருவதை நேட் தனது நண்பனான ரோஜரிடம் பகிர்ந்துகொண்டார். இதையறிந்த ரோஜர் தானும் அவர்களோடு இணைந்து பணியாற்ற விரும்பினார். இறுதியில் ஐந்தாவது நபராக ஜிம் எலியட் குழுவினரோடு ரோஜர் யூடெரியன் இணைந்தார்.

இந்த ஐவரும் இணைந்து ஹ்யூவரானி பழங்குடியினர் மத்தியில் ஊழியத்திற்கான கதவு திறக்கப்பட வேண்டுமென ஊக்கமாக ஜெபித்தனர். அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்து வந்தார்கள். ஹ்யூவரானி பழங்குடிகளோடு தொடர்புகொள்ள வேண்டுமானால் அவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்தாக வேண்டும்!

நேட் செயின்ட் அந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்கு மேலாக விமானத்தில் செல்லும்போதெல்லாம் ஜெபத்தோடு அவர்களைத் தேடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்! ஒருமுறை இவ்வாறு தேடியதின் விளைவாக நேட் செயின்டும் எட் மெக்கல்லியும் ஹ்யூவரானி பழங்குடிகளின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர். இந்த அற்புதமான செய்தியை ஷாண்டியாவில் தங்கி ஊழியம் செய்து கொண்டிருந்த ஜிம் எலியட்டுக்கும் புயுபுங்குவில் ஊழியம் செய்து கொண்டிருந்த பீட்பிளமிங்குக்கும் தெரிவித்தார்கள். பின்பு அனைவரும் தேவனைத் துதித்தார்கள்.

“ஆபரேஷன் ஆக்கா”

அன்றிரவு ஷெல் மேரா என்ற இடத்திலிருந்த அருட்பணி மையத்தில் அனைத்து அருட்பணியாளர்களும் கூடினார்கள். பெரிய வரைபடத்தை விரித்துவைத்து, அவர்கள் சரியான இடத்தையும் தூரத்தையும் கணக்கிட்டார்கள்.

கர்த்தர் ஊழியத்துக்கான வாய்ப்பைத் திறந்து கொடுத்திருக்கிறார் என்று விசுவாசித்த அவர்கள் ஊழியத்துக்கான ஆயத்தத்தில் முழு மூச்சோடு ஈடுபட்டார்கள். அவர்கள் இந்த ஊழிய முயற்சிக்கு ”ஆப்ரேஷன் ஆக்கா” என்று பெயரிட்டிருந்தனர்! அவர்கள் ஹ்யூவரானி குடியிருப்பை ”டெர்மினல் சிடி” என்றும் அவர்கள் இறங்கும்படி திட்டமிட்டிருந்த குராரே ஆற்றங்கரையை ”பாம் பீச்” என்று குறிப்பிட்டார்கள்.

அந்நியர்களைக் கண்டாலே ஹ்யூவரானி பழங்குடிகள் உடனடியாகத் தாக்கி அவர்களைக் கொன்றுபோடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்! அவர்கள் மத்தியில் ஊழியம் செய்ய வேண்டுமானால் முதலில் அவர்களோடு நட்புறவை உண்டாக்கிக்கொள்ளுவது அவசியமாகும். அவர்களோடு தொடர்பு கொள்வதற்கு அவர்களது மொழியையும் அறியவேண்டும். இதற்கான முயற்சியில் ஜெபத்தோடு ஈடுபட்டார்கள்.

நேட் செயின்டின் மூத்த சகோதரியாகிய ரேச்சல் செயின்ட் உலகெங்கிலும் வேதாகம மொழி பெயர்ப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் Wycliff Bible Translators என்ற ஊழிய அமைப்பின் சார்பில் 1955 - ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஈக்வேடார் நாட்டுக்கு வந்து இறங்கினார்.

அங்கே இருவரும் கேதரின் பீக் என்ற பெண்மணியும் க்யூசுவா பழங்குடிகளின் மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் ஊழியத்தில் ஈடுபட்டிருந்தார்கள். ஹ்யூவரானி பழங்குடிகளின் மொழியையும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற நோக்கமும் இவர்களுக்கு இருந்தது. தேவன் அற்புதவிதமாக இவர்கள் எல்லாருடைய வாஞ்சையையும் நிறைவேற்றினார்!

ஹ்யூவரானி பழங்குடிகளிடையே அடிக்கடி குடும்பச் சண்டைகள் நடப்பதுண்டு. அப்போது ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற குடும்பத்தினரைக் கொன்றுபோடுவார்கள்! இவ்வாறு ஒருமுறை குடும்பங்களுக்கிடையில் நடைபெற்ற சண்டையிலிருந்து தப்பி ஓடிவந்த டாயுமாவும் அவளுடன் வந்த இரண்டு பெண்களும் க்யூசுவா பழங்குடிகள் வசிக்கும் கிராமத்தில் அடைக்கலம் புகுந்தனர். க்யூசுவா பழங்குடிகள் சிலர் அவளை தங்கள் மத்தியில் ஊழியம் செய்துவந்த ரேச்சல் செயின்டிடம் அழைத்து வந்தார்கள். டாயுமா பேசும் ஹ்யூவரானி மொழியை அறிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வங்கொண்ட ரேச்சல் அவளைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டார். ரேச்சல் செயின்ட் படிப்படியாக டாயுமாவின் மூலம் ஆக்கா பழங்குடிகளின் ஹ்யூவரானி மொழியைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார்.

உலகத்திலேயே இந்த ஹ்யூவரானி மொழி மட்டுமே வேறு எந்த மொழியின் கலப்பும் இல்லாத மொழி என்று சொல்லப்படுகின்றது. இந்த கொடூரமான பழங்குடிகள் வேறு எந்தப் பழங்குடிகளுடனும் தொடர்பில்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள்!

ஜிம் எலியட்டும், அவருடைய மனைவி எலிசபெத் எலியட்டும் க்யூசுவா மொழியை அறிந்திருந்தபடியால் அவர்கள் டாயுமாவுடன் பேசி, அவளது மொழியில் சில முக்கியமான வாக்கியங்களை அறிந்துகொண்டார்கள். “எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது” “நான் உங்கள் நண்பன்” போன்ற முக்கியமான வாக்கியங்களை கற்றுக்கொண்டனர்.

இந்த ஹ்யூவரானி ஊழியத்துக்காக அவர்களை ஆயத்தம்பண்ணும்படி தேவன் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் டாயுமாவை அவளுடைய கூட்டத்திலிருந்து அற்புதமாகப் பிரித்துக்கொண்டு வந்திருந்தார் அல்லவா? எல்லாவற்றையும் அறிந்த அவர் முன்கூட்டியே திட்டமிடுகிறார்!

ஹ்யூவரானியோடு நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளும்படியாக முதலில் ஹ்யூவரானி பழங்குடிகளின் குடியிருப்புக்கு மேலாகப் பறந்து, அவர்களுக்குப் பரிசுப் பொருட்களைக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். விதவிதமான பரிசுப் பொருட்களை அவர்கள் கவரும் வண்ணமாக விமானத்திலிருந்து அவர்கள் குடியிருப்பு பகுதியில் இறக்கினார்கள். இதற்கு நன்கு பலன் கிடைத்தது. ‘எங்களுக்கு உங்களை பிடித்திருக்கிறது, உங்களைச் சந்திக்க விரும்புகிறோம்” என்று எட் ஒலிபெருக்கியில் கூறியபோது கீழே ஹ்யூவரானி பழங்குடிகள் ஆர்வத்துடன் நடனமாடுவதைக் கண்டார்கள். ஒருமுறை அவர்கள் அலுமினிய வாளியில் அனுப்பிய பரிசுப் பொருட்களை எடுத்துக்கொண்ட பழங்குடிகள் பதிலுக்கு தலையில் அணியும் இறகுகளால் செய்யப்பட்ட ஒரு கிரீடத்தையும் ஒரு கிளியையும் வைத்து அனுப்பியிருந்தார்கள்.

தாங்கள் அந்தப் பழங்குடிகளை நேரடியாகச் சந்திப்பதற்கான வேளை வந்துவிட்டது என்பதை அந்த ஐவரும் உணர்ந்தார்கள். குராரே ஆற்றங்கரையில் தாங்கள் ”பாம்பீச்” என்று பெயரிட்டிருந்த மணல் பகுதியில் விமானத்தை இறக்கலாம் என்று திட்டமிட்டார்கள். இது ஹ்யூவரானி கிராமத்திலிருந்து நான்கு மைல் தொலைவுக்குள்ளாக இருந்தது. இரண்டாம் தேதி திங்கட்கிழமை அருட் பணியாளர்களும், அவர்களது மனைவிமார்களும் அராஜீனோ இல்லத்தில் கூடி தங்களை ஒப்புக்கொடுத்து ஜெபித்தார்கள். அடுத்த நாள் விமானத்திலிருந்து எட் மெக்கல்லியே முதன் முறையாகத் தரையிறங்கினார். அதன்பின் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தனர். தாங்கள் தங்குவதற்காக ஒரு மரவீட்டை அவர்கள் உருவாக்கினார்கள். அதில் ஒரு ஜெப ஆராதனையை நடத்தினார்கள்.

“டெர்மினல் சிடிக்கு” மேலாக விமானத்தில் பறந்த நேட் செயின்ட் ”நாளை குராரே ஆற்றங்கரைக்கு வாருங்கள்”என்று ஒலிபெருக்கி மூலம் ஹ்யூவரானி பழங்குடிகளுக்கு அறிவித்தனர். ஆனால் முதல் இரு நாட்களும் எவருமே ஆற்றங்கரைக்கு வரவில்லை! இது இவர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. வெள்ளிக்கிழமை காலை அவர்கள் மறுபடியுமாக ”டெர்மினல் சிடியின்” மேலாகப் பறந்துசென்று, ஹ்யூவரானி பழங்குடிகளைச் சந்திக்க வருமாறு அழைப்புவிடுத்தனர்.

சற்று நேரம் கழித்து, ஆற்றங்கரையிலிருந்து ஒரு ஆணும் இரண்டு பெண்களும் அவர்களுக்கு முன்பாக வந்தார்கள். ஐந்து பேரும் “புய்னானி” என்று குரல் கொடுத்தார்கள் ஹ்யூவரானி மொழியில் அதற்கு ”நல்வரவு” என்று அர்த்தமாகும்.

அந்த ஹ்யூவரானி மனிதன் ஏதோ பேசத் துவங்கினான். ஆனால் அவர்களுக்குப் புரியவில்லை! ஆனாலும் முதன்முதலாக ஒரு ஹ்யூவரானி மனிதனைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்புக்காகத் தேவனைத் துதித்துக் கொண்டிருந்தார்கள்.

உள்ளே ஓடிச்சென்ற ரோஜர் கிழங்குகளைச் சீவக்கூடிய சில கத்திகளைக் கொண்டு வந்தார். அவர்கள் சந்தோஷத்தோடு வாங்கிக் கொண்டார்கள். தாங்கள் பயன்படுத்திய விமானத்தின் மாதிரிகளையும் அவர்களுக்குக் கொடுத்தார். அந்த ஆணுக்கு ஜார்ஜ் என்றும் அந்த பெண்ணிற்கு டெலிவா என்றும் பெயரிட்டனர். அவன் அவர்களுடைய விமானத்தில் பயணிக்க விரும்புவதை சைகை மூலமாக தெரியப்படுத்தினான். அதற்கு அவர்கள் தயங்கினாலும் அவர்களோடுள்ள நல்லுறவை வளர்த்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தோடு ஜார்ஜை விமானத்தில் ஏற்றி அவன் கிராமத்திற்கு மேலாக பறந்து காண்பித்தனர். அவனது கிராமத்திற்கு வர ஐவரும் அவனிடம் சைகை மூலம் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அவன் அதை விரும்பவில்லை. அந்த இளம் பெண் அவர்களிடம் தொடர்ந்து ஹ்யூவரானி மொழியில் பேசிக் கொண்டிருந்தாள். அவள் என்ன பேசுகிறாள் என்று அவர்களுக்குப் புரியவில்லை.

டாயுமாவையும் அழைத்து வந்திருந்தால் இப்போது இந்தப்பெண் பேசுவதைப் புரிந்துகொண்டிருக்கலாமே என்று ஜிம் எலியட் நினைத்தார். ஆனால் அவள் டாயுமாவைப் பற்றி விசாரிக்கவே வந்திருக்கிறாள் என்று அந்த நேரத்தில் அவருக்குத் தெரியாது. அன்று மாலைவரை மூன்று பேரும் அவர்களோடு இருந்தார்கள். அருட்பணியாளர்கள் அவர்களோடு சேர்ந்து பல புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்கள். இருள் பரவத் துவங்கிய போது முதலில் அந்த இளம் பெண்ணும் அதைத் தொடர்ந்து அந்த ஆணும் புறப்பட்டு ஆற்றங்கரையில் நடந்து கண்பார்வையிலிருந்து மறைந்துவிட்டார்கள்.

அன்றிரவு விமானத்தின் மூலம் அராஜீனோவுக்கு நேட்டும் பிட் பிளமிங்கும் திரும்பினர். தங்களுக்காக ஆவலோடு காத்திருந்த மனைவிமார்களிடம் நடந்தவைகளைச் சந்தோஷத்தோடு தெரிவித்தார்கள். அவர்கள் ஆண்டவர் கொடுத்த வாய்ப்புக்காக அவரைத் துதித்தார்கள். அதுவரை எந்த வெள்ளையருக்கும் ஒரு ஹ்யூவரானி மனிதனை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கவில்லை. எப்படியும் அடுத்த நாள் தங்களால் ஹ்யூவரானி கிராமத்துக்குச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. இதைக் குறித்து உடனுக்குடன் அறிய அவர்களுடைய மனைவிமார்கள் விரும்பினார்கள். இதனால் வயர்லெஸ் மூலம் இடையிடையே தொடர்பு கொள்ளுவதாக நேட் ஒப்புக்கொண்டார். ஆனால் சனிக்கிழமை ஹ்யூவரானியர் எவரையும் சந்திக்க முடியவில்லை.

1956 - ஆம் ஆண்டு ஜனவரி 8 - ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காட்டுப் பகுதியிலிருந்து ஆற்றங்கரையை நோக்கிச் சில ஹ்யூவரானி ஆண்கள் வருவதை நேட் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது கவனித்தார். கரையில் இறங்கிய அவர் “அவர்கள் வருகிறார்கள்” என்று சந்தோஷக் குரல் எழுப்பினார். 

12.35 மணிக்கு வயர்லஸ் மூலம் தொடர்பு கொண்ட அவர்கள் இந்த மகிழ்ச்சியான செய்தியை தங்கள் மனைவிமார்களுக்கு அறிவித்தனர். டெர்மினல் சிடியிலிருந்து பத்துப்பேர் வருகிறார்கள் என்று தெரிவித்த அவர்கள் அடுத்து மாலையில் தொடர்பு கொள்ளுவதாக தெரிவித்தனர். ஆனால் மாலையில் எவரும் வயர்லெஸ் மூலமாகத் தொடர்பு கொள்ளவில்லை. அதற்குள்ளாக ஐந்து பேரும் ஹ்யூவரானியின் ஈட்டிகளுக்குப் பலியாகியிருந்தார்கள்.

சிலநாட்கள் கழித்தே அவர்களுடைய சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது நேட் செய்ன்டின் கையிலிருந்த கைக்கடிகாரம் 3.12 மணிக்கு நின்று போயிருந்தது. அங்கே எந்தப் போராட்டமும் நடந்ததற்கு அறிகுறி காணப்படவில்லை. ஹ்யூவரானி பழங்குடிகள் நட்புக்காக வருவதுபோல வந்து அவர்களைக் கொன்று போட்டிருக்கிறார்கள். எதிர்பார்த்திருந்த அழைப்பு வராதபடியால் மனைவிமார்கள் கவலையோடு காத்திருந்தார்கள். அவர்களாலும் வானொலி மூலமாகத் தொடர்புகொள்ள முடியவில்லை.

இந்த ஆக்கா ஊழிய முயற்சியைக் குறித்து அவர்கள் தங்கள் நெருங்கிய அருட்பணி நண்பர்களுக்குக்கூடத் தெரிவித்திருக்கவில்லை. திங்கட்கிழமை மார்ஜரி செயின்ட் நேட் செயின்டை போல மிஷனெரிகளுக்காக விமானம் ஓட்டி வந்த ஜாணி கீனன் என்பவரிடம் இதைத் தெரிவித்தார். அவர் ஷெல்மேராவிலிருந்து மற்றொரு பைப்பர் சிறு விமானத்தின்மூலம் பாம்பீச்சுக்குப் புறப்பட்டார்.

நேட் செயின்டின் விமானம் கிழித்து நாசமாக்கப்பட்டிருப்பதை அவர் கண்டு அதைக் குறித்த செய்தியை வயர்லஸ் மூலம் தெரிவித்தார். ஆனால் அந்த ஐவரையும் காணோம். இதை அறிந்த மனைவிமார்கள் கனத்த இருதயத்தோடு உடனடியாக ஷெல்மேரா அருட்பணி மையத்தைச் சென்றடைந்தார்கள். மதியம்வரை கூடுதலான எந்த விவரமும் கிடைக்காதபடியால் அவர்கள் குயிட்டோவிலிருந்த வானொலி நிலையத்தின் மூலம் இதை அறிவித்து உதவிக்காக வேண்டிக்கொண்டார்கள்.

உடனடியாகத் தேடுதல் துவங்கியது. ஈக்வேடார் நாட்டுப் போர்வீரர்களும் அருட்பணியாளர்களும் க்யூசுவா பழங்குடிகளும் இதில் ஈடுபட்டார்கள். பத்திரிக்கை நிருபர்களும் புகைப்படக்காரர்களுடம் கூடத் தேடுதலில் ஈடுபட்டார்கள்.

அருட்பணியாளர்களின் சிதைந்துபோன சரீரங்களையும் உருக்குலைந்துபோன உபகரணங்களையும்மட்டுமே அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது. மதிய வேளையில் இந்தச் செய்தி மனைவிமார்களுக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் அழுது புலம்புவார்கள் என்று பத்திரிக்கை நிருபர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் அவர்களோ தங்கள் கணவன்மார்களின் விசுவாசத்தைக் குறித்து வல்லமையாகச் சாட்சி கொடுத்தார்கள். அந்த அருட்பணியாளர்கள் இறுதியாகத் தங்கியிருந்த மர வீட்டுக்கு அருகில் மணலில் அவர்களுடைய சரீரங்கள் அடக்கம் செய்யப்பட்டன. மனைவிமார்களில் ஒருவர் ”அந்த இடத்தில் அவர்கள் ஆறு அற்புதமான நாட்களைக் கழித்திருக்கிறார்கள்; அங்கே வார்த்தையினாலும் செயல்களினாலும் தேவனுடைய இரட்சிப்பின் சுவிசேஷத்தை ஹ்யூவரானி உட்பட எல்லோருக்கும் அறிவித்திருக்கிறார்கள். அங்கேயே அவர்கள் உயிர்த்தெழுதலின் நாள் வரையில் இளைப்பாறட்டும் என்று சொல்லியிருக்கிறார்.

அடுத்த நாள் விமானம் மூலம் அந்த இடத்தின் மேலாக மனைவிமார்கள் அழைத்துச் செல்லப்பட்டபோது விமானத்தில் இருந்தபடியே அவர்களுடைய கல்லறையைக் கண்டார்கள்.

”இதுவே உலகத்திலேயே அழகான கல்லறை” என்று மார்ஜரி செயின்ட் கூறினார்.

அந்த விமானம் அந்த இடத்தை சுற்றி வந்தபோது, அவர்கள் 2 கொரிந்தியர் ஐந்தாம் அதிகாரத்தை வாசித்தார்கள். அந்த விமானத்தின் தரையில் முழங்காற்படியிட்டு தங்கள் அன்புக்குரியவர்களை ஆண்டவருடைய கரங்களில் ஒப்புக் கொடுத்தார்கள்.

”எங்கள் கேடயமும் பாதுகாவலருமான கர்த்தாவே உம்மில் நாங்கள் இளைப்பாறுகிறோம்” என்ற பாடலைப் பாடினார்கள்.

முன்பைவிட திடமான விசுவாசத்தோடு தங்கள் கணவன்மார்களின் ஊழியத்தைத் தொடர்ந்து நடத்துவதாக உறுதியெடுத்துக் கொண்டார்கள்.

இந்த ஐந்து அருட்பணியாளர்களின் எதிர்பாராத மறைவைக் குறித்த செய்தி உலகமெங்கும் பரவியது! விருப்பப்படி வாழ்ந்துகொண்டிருந்த பல இளைஞர்கள் இருதயத்தில் தொடப்பட்டார்கள். அவர்கள் கிறிஸ்துவுக்காக வாழும்படி தங்களை ஒப்புக் கொடுத்தார்கள்! சிலர் அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் முயற்சிகளையும் வீணடித்துவிட்டார்கள் என்று சொன்னாலும் அதிகமானோர் அவர்களுடைய வாழ்க்கையினால் தொடப்பட்டார்கள்.

அதன் பின்பதாக நேட் செயின்டின் மூத்த சகோதரியாகிய ரேச்சல் செயின்ட் மூலமாக டாயுமா கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டாள். இவளே ஹ்யூவரானி பழங்குடிகளின் மத்தியில் முதன்முதலாகக் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவள்! 5 மிஷனெரிமார்களின் உயிர் தியாகம் இவளது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அருட்பணியாளர்கள் கொல்லப்பட்ட பிறகு எவருமே ஹ்யூவரானி பழங்குடிகளின் இடத்துக்குச் செல்ல முன்வரவில்லை. 1957 - ஆம் ஆண்டு ரேச்சல் செயின்ட் டாயுமாவைத் தன்னுடன் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றார். மனந்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருந்த அந்த ஆக்கா பெண்ணைக் கண்டு பலரும் வியப்படைந்தார்கள்.

இதனிடையே அமெரிக்கா தேசம் திரும்பி யிருந்த எலிசபெத் எலியட் தனது மூன்று வயது மகள் வேலரியையும் அழைத்துக்கொண்டு மீண்டும் ஈக்குவேடார் புறப்பட்டார். தனது கணவர் ஜிம் எலியட் விட்டு சென்ற அருட்பணியை மீண்டும் தொடரவேண்டுமென வைராக்கியமுடையவராக இருந்தார். ரேச்சலும் டாயுமாவுடன் ஈக்குவேடார் திரும்பி எலிசபத் எலியட்டுடன் இணைந்து கொண்டனர். மீண்டும் வேதாகம மொழி பெயர்ப்பு பணி தொடங்கப்பட்டது. டாயுமாவைத் தேடிவந்த அவளது அத்தை ஹ்யூவரானி பழங்குடி குடியிருப்பிற்கு வரும்படி அவளை அழைத்தாள். ரேச்சல் மற்றும் எலிசபெத் ஆகியோரின் சம்மதத்தோடு தனது சொந்த கிராமத்திற்கு டாயுமா புறப்பட்டு சென்றாள்.

கொல்லப்பட்ட ஐந்து அருட்பணியாளர்களுக்கு சம்பவித்த யாவற்றையும் அறிந்தாள். அவர்களது நற்பண்புகளையும் சேவை மனப்பான்மையையும் தனது மக்களுக்கு விளக்கினாள். பின்பு இரண்டு மாதங்களுக்கு பின்பு திரும்பி வந்து ரேச்சலையும் எலிசபெத் எலியட்டையும் ஹ்யூவரானி பழங்குடி கிராமத்திற்கு அழைத்து சென்றாள். முரட்டாட்டமான அந்த மக்களுக்கு நற்செய்தியை அறிவித்து அவர்களை இரட்சிப்பிற்குள் வழிநடத்தினர். இவர்கள் அங்கு சென்றபோது அருட்பணியாளர்களை கொலை செய்த ஆறு இளைஞர்களில் 4 பேர் உயிரோடிருந்தனர். அவர்கள் அனைவரும் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டனர். பின்பு கர்த்தருடைய ஊழியர்களாக மாறி உலகத்தின் பல பகுதிகளுக்கு சென்று கிறிஸ்துவை சாட்சியாக அறிவித்தனர்.

எல்லாவற்றையும் முன்பே திட்டமிட்டு தமது சித்தப்படி நடத்தும் தேவன் இந்த ஐவரும் சிந்திய இரத்தத்துளிகள் வீணாகிப்போகும்படி விட்டுவிடவில்லை.

Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!