Charles Tleoplilus Ewald Rhenius சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ்

 

பிறப்பு

       சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ் நவம்பர் 5, 1790 - ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள கிரான்டன்ஸ் என்னுமிடத்தில் பிறந்தார். ரேனியஸ் 6 வயதாயிருக்கும் போது தந்தை நிக்கலஸ் ரேனியஸ் இறந்து விட்டார். தாயார் கேத்தரின் டாரதி, இவரோடு பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். தனது 14 - ஆம் வயதில் தன் தாய்க்கு உதவ வேலை தேடி எழுத்தர் வேலையில் சேர்ந்தார். ஊதியம் போதவில்லை. இதை அறிந்த இவரின் பெரியப்பா தன் பண்ணையில் ஈடுபடுத்தி தன்னோடு வைத்துக் கொண்டார்.

இந்தியா வருகை

            1807 - ஆம் ஆண்டு கிறிஸ்தவ சமய ஊழியத்தில் ஆர்வங்கொண்டு, அதற்காகத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள பெர்லின் சென்றார். அங்கு 15 மாதங்கள் இறையியல் கல்வி பயின்று 1812 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 - ஆம் நாள் குரு பட்டம் பெற்றார். 1814 - ஆம் ஆண்டு ஜீலை 4 - ஆம் தேதி சர்ச் மிஷன் சங்கம் ( CMS) சார்பில் இந்தியாவுக்கு ஊழியராக வந்தார். இந்தியா வந்த இவர் தரங்கம்பாடியில் சிறிது காலம் தங்கி தமிழ் பயின்றார். பின்பு சென்னை சென்றார். அங்கு அன்னி வேன் சாமரன் ( Annie Van Someran) என்ற டச்சு நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அங்கு தமிழ், தெலுங்கு மொழிகளைக் கற்றார். ஜெர்மானிய கிறிஸ்தவ மத போதகர்கள் ஆங்கிலிக்கன் திருச்சபையை அனுசரித்துப் போக வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரேனியஸ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு மாற்றம் செய்யப்பட்டார். 1820 ஜீலை 7 - ஆம் தேதி முதல் திருநெல்வேலியில் 18 ஆண்டுகள் பணியாற்றினார். திருநெல்வேலி சபையிலும் சாதி மதப் பழக்கங்கள் இருந்தது. ஆனால் ரேனியஸ் இந்தப் பாகுபாடுகளை அனுமதிக்கவில்லை. 107 பள்ளிகள், 371 ஆலயங்கள், மாணவர் தங்கும் விடுதிகளிலும் அனைத்து மாணவர்களும் சரிசமமாக நடத்தப்படல் வேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். மேலும் தமிழிலேயே பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

          திருநெல்வேலி மாவட்டத்தில் கிறிஸ்தவ சமய பணியில் இவர் ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது. இதனால் இவரை திருநெல்வேலி அப்போஸ்தலர் ( The Apostle of Tirunelveli) என்று அழைக்கப்பட்டார். இவர் திருநெல்வேலியில் 371 சபைகளை நிறுவினார். கதீட்ரல் ஆலயம் இருக்கும் இடத்தில் 1826 - ஆம் ஆண்டு முதன்முதலில் ஒரு சிறு ஆலயத்தைக் கட்டினார். அது இன்று திரித்துவப் பேராலயம் எனப்படும் ஊசிக் கோபுரமாக சிறப்பு பெற்றுள்ளது. பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்ற கொள்கையுடைய இவர் ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவினார். அது இன்று மேரி சார்ஜெண்ட் மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்துள்ளது. அது போல் உபதேசியார்களும், ஆசிரியர்களும் கற்பதற்கு ஒரு பயிற்சி நிலையத்தையும் தொடங்கினார். அது இன்றும் உள்ளது. 

         ஒருமுறை காலரா நோய் திருநெல்வேலி மாவட்டத்தை தாக்கிய போது பல உயிர்கள் செத்து மடிந்தன. காலரா பயத்தினால் மக்களுக்கு உதவிட ஆட்கள் முன்வரவில்லை. நற்செய்தி தொண்டனாய் பணிபுரிந்து வந்த ரேனியஸ் ஐயர் மக்களுக்கு உதவிட ஓயாமல் உழைத்தார். காலரா பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை எழுதி மக்களுக்கு வாசித்துக் காட்டி மக்களின் வாழ்வை மீண்டும் மலரச் செய்தார்.

        உயர் ஜாதியினரால் இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பல கிராமங்களை அமைத்தார். அவற்றில் சில நல்லூர், மெய்யூர், சமாதானபுரம், முதலூர், அடைக்கலாபுரம், கடாட்சபுரம், சத்திய நகரம், கிருபாபுரம், அன்பின் நகரம், ஆரோக்கியபுரம், சாந்தபுரம், பாவநாசப்புரம், நேசப்புரம், நல்லம்மாள்புரம், இரட்சணியபுரம், சௌக்கிய புரம், தர்ம நகரம், நாயினூர், விசுவாசபுரம், சந்தோஷபுரம், ஆசீர்வாதபுரம், அனுக்கிரக புரம், சீயோன் மலை போன்றவை குறிப்பிடத்தக்கவை. 

சங்கங்கள்

        ரேனியஸ் சென்னையிலிருந்த போது 1818 - இல் துண்டு பிரசுரம் மற்றும் சமய நூல்கள் சங்கம் (Madras Tract and Retigious Book Society) என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த அமைப்பு பின்னாளில் கிறிஸ்தவ இலக்கிய சங்கத்துடன் (Christian Literary Society) இணைக்கப்பட்டது. திருநெல்வேலியிலும் துண்டு பிரசுர சங்கத்தை நிறுவினார். லண்டனிலிருந்து கொண்டுவரப்பட்ட தாளில், துண்டு பிரசுரங்களை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு வினியோகம் செய்தார். 

தர்ம சங்கம் என்ற பெயரால் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் பள்ளிகள், வீடுகள், ஆலயங்கள் கட்டுவதற்கு நிலம் வாங்கிக் கொடுத்தார்.

 விதவைகளின் ஆதரிப்பு சங்கம் நிறுவி, அதன் மூலம் உபதேசியாரின் (மனைவி) விதவைகளுக்கு ஜீவனாம்சம் கொடுத்து வர ஏற்பாடு செய்தார். 

கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள், குடும்பப் பழக்கத்தினால் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் குரங்கணி கொடை விழாவில் கலந்து வந்தனர். அதனால் அவர்கள் பழக்கத்தை மாற்ற திருமண்டலத்தில் அனைத்து சபைகளையும் ஒருங்கிணைக்கிற தோத்திரப் பண்டிகையாக வருடந்தோறும் பாளையங்கோட்டையில் 1834 - ஆம் ஆண்டு ஜூலை 9 அன்று மாம்பழச் சங்கத்தை ஆரம்பித்தார். இன்றும் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

        ஆலய வளர்ச்சிக்காக சபை மக்கள் ஒருநாள் வருமான காணிக்கைப் படைத்தல், ஆலய பரிபாலன நிதித் திட்டம், கைப்பிடி கைப்பிடி அரிசி காணிக்கை போன்ற திட்டங்களை ரேனியஸ் ஐயர் அறிமுகப்படுத்தினார். இத்திட்டங்கள் இன்றும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. 

தமிழ் பணி

         தமிழ் அறிஞர்களிடம் 14 வருடங்கள் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். இயல்பாகவே இனிமையாக பேசக் கூடியவர் தமிழையும் சிறப்பாக பேசக்கூடியவரானார். தமிழின் முதல் அறிவியல் புத்தகம் எழுதிய முன்னோடியாகவும் திகழ்ந்தார். 

          இவர் 11 உரைநடை நூல்கள், 9 பாடநூல்கள் என பல தமிழ் நூல்களை எழுதியுள்ளார். தமிழ் மொழிக்குச் சிறப்பாய் தொண்டாற்றிய வீரமாமுனிவர், போப் ஐயர், கால்டுவெல் ஐயர் போன்றவர்களுக்கு இணையாக ரேனியஸ் ஐயரும் கருதப்படுகிறார். 

வேதாகம மொழிபெயர்ப்பு

         அக்காலத்தில் தமிழ் கிறிஸ்தவர்கள் பயன்படுத்திய வேத நூலை திருத்தி பதிப்பிக்க கருதினர். அதற்கு தக்க தமிழ் புலமை வாய்ந்தவர் ரேனியஸ் ஐயரே என கருதி அவரை வேண்டிக் கொண்டனர். வேதப் பொருளை தெளிவாகத் தெரிவிக்கும் முறையில் அமைந்த மொழிபெயர்ப்பே சிறந்ததென்று அவர் கருதினார். அதனால் முந்தைய வேத நூலைத் திருத்துவதை விட புதிதாக வேதாகமத்தை மொழி பெயர்ப்பது சிறந்தது என கருதினார். சென்னையில் வேதாகம மொழிபெயர்ப்பை தொடங்கிய ரேனியஸ் ஐயர் திருநெல்வேலியிலும் தொடர்ந்து செய்தார். அதற்கென ஒரு செயற்குழு நியமனமாகியிருந்தாலும், குழுவின் பிரதம மொழிபெயர்ப்பாளராக ரேனியஸ் ஐயரே முழு வேலையையும் செய்து வந்தார். அவர் 12 ஆண்டுகள் முயன்று புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து முடித்தார். கூட்டெழுத்து முறையை மாற்றி வார்த்தைகளுக்கு நடுவில் இடம் விட்டு எழுதும் பழக்கத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் இவரே. தமிழ் வேதாகமத்தின் மூன்றாவது மொழிபெயர்ப்புக்கு சொந்தக்காரர் ஆவார்.

          1838 - ஆம் ஆண்டு ஜூன் 5 - ஆம் தேதி ரேனியஸ் ஐயர் மரணம் அடைந்தார். அடைக்கலாபுரத்தில் ரேனியஸ் ஐயர் புதிதாக தூய யோவான் ஆலயத்தை உருவாக்கியிருந்தார். அவ்வாலயத்தின் கல்லறைத் தோட்டத்திற்கு வெளியே ஊரின் நடுவில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

          ரேனியஸ் ஐயர் தேவனுக்காக பல காரியங்களை பலர் எதிர்த்தும் செய்திருக்கிறார். இன்று நாம் எப்படி வாழ்கிறோம்? தேவனுக்காக என்ன செய்கிறோம் என சிந்தித்துப் பார்ப்போம். சிறு தோல்விக்கும் சோர்ந்து போகின்றோமா? அல்லது மறுபடியும் தேவனுக்காக எழுந்து பிரகாசிக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம். தேவனுக்காக பல திருச்சபைகளை இந்த மண்ணில் உருவாக்கிய ரேனியஸை போன்று இன்று நம்மில் யாருண்டு. ரேனியஸை போன்று அர்ப்பணத்தோடு செயல்பட நாம் எழும்புவோமா?

Comments

Popular posts from this blog

வைக்கோல் போர் ஜெபம்- Samuel J.Mills (Tamil & English)

பக்த்சிங் Bakht Singh

குப்பையிலும் ஒரு கோமேதகம் Treasure among the trash!