வில்லியம் ஆல்ட் William Ault (Tamil & English)
வில்லியம் ஆல்ட் இங்கிலாந்து தேசத்தில் ஷு தயாரிக்கும் ஜாபேஸ் ஆல்ட் என்பவருக்கு 1778ம் ஆண்டு மகனாகப் பிறந்தார்.இவரது தாயும், தந்தையும் தெய்வ பக்தியுள்ள மகனாக இவரை வளர்த்து வந்தார்கள். வில்லியம் தனது 7வது வயதிற்குள் 6 முறை வேதாகமத்தை முழுவதுமாக வாசித்து முடித்திருந்தார்.தான் வாழ்ந்து வந்த பகுதியில் ஞாயிறு பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். 1808ம் ஆண்டு இங்கிலாந்து தேசத்தில் உள்ள மெத்தடிஸ்ட் திருச்சபையின் போதகராக இந்த வில்லியம் ஆல்ட் பணி அமர்த்தப்பட்டு ஆண்டவரின் ஊழியத்தை செய்து வந்தார்.ஒரு வாரத்தில் சுமார் 25 இடங்களில் கிறிஸ்துவைப் பற்றி பிரசங்கம் செய்து வந்தார். இலங்கை தேசத்தில் இயேசு கிறிஸ்து இல்லை, அவரை அறிவிக்க ஊழியர்களும் இல்லை என்று கேள்விப்பட்ட வில்லியம் ஆல்ட் தான் ஒரு மிஷனெரியாக இலங்கை தேசத்திற்கு செல்ல வேண்டுமென ஆவியானவரால் உந்தித் தள்ளப்பட்டார்.
இலங்கை தேசத்திற்கு செல்வதற்கான முயற்சியை மேற்கொண்டு மிஷனெரி சங்கத்திற்கு கடிதம் எழுதி அனுமதி கேட்டார்.திருமணம் முடித்திருந்தால் மட்டுமே செல்ல முடியும் என்று அவர்கள் பதில் கடிதம் அனுப்பினார்கள். தேவன் தனக்கு வாழ்க்கைத் துணையாக நியமித்திருந்த சாரா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.அவரும் இலங்கை தேசத்தில் ஊழியம் செய்ய அர்ப்பணித்து, இருவரும் திருமணம் முடிந்த 5வது நாள் இலங்கைக்கு பயணம் செய்ய மிஷனெரி சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. 1813ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் நாள் மிஷனெரி குழு இங்கிலாந்திலிருந்து கப்பலில் புறப்பட்டனர். அந்நாட்களில் பாய்மரக் கப்பலில் தான் பயணம் செய்தனர். கப்பல் புறப்பட்ட மூன்றாம் நாளில் பயங்கர புயல் ஏற்பட்டது.பலத்த காற்றினிமித்தமாக கப்பல் அங்குமிங்கும் அலைமோதியது. கப்பலில் இருந்த சிலருக்கு காயங்கள் ஏற்பட்டது. வில்லியம் ஆல்ட்டின் மனைவி சாராவும் அதிக பெலவீனமடைந்தார். எந்தவொரு மருத்துவ உதவியும் அங்கு இல்லை, இங்கிலாந்திற்கும் திரும்பி போக முடியவில்லை. சுமார் 5 வாரங்கள் தொடர்ந்து கஷ்டப்பட்டு வந்த சாரா, தன் கணவரிடம் தனக்காக ஒரு பாட்டு பாடி, ஜெபிக்க கேட்டார். இருவரும் சேர்ந்து பாடிக் கொண்டிருக்கும் போதே, சாராவின் உயிர் பிரிந்தது. கப்பல் கேப்டன் ஆல்டிடம், அருகே ஏதாவது ஒரு இடத்தில் கரை சேர்ந்து அடக்கம் செய்து விட்டு போகலாம் என்று கேட்க, வில்லியம் ஆல்ட் மறுத்து விட்டார். தனது மனைவியின் உடலில் கயிற்றைக் கட்டி கடலில் இறக்கி விட்டார். மனைவி இறந்ததினால் திரும்பி இங்கிலாந்து தேசத்திற்கு செல்ல அவர் நினைக்கவில்லை. தான் முன் வைத்த காலை எக்காரணம் கொண்டும் பின் வைக்க கூடாது என்ற உறுதியுடன், தனது பயணத்தை தொடர்ந்தார். 6 மாத கப்பல் பயணம் முடிவடைந்து இலங்கை தேசத்தின் மட்டக்களப்பு பகுதியில் தனது ஊழியத்தை ஆரம்பித்தார்.
ஆரம்பித்த இரண்டு மாதங்களில் தமிழ் மொழியை கற்று கொண்டு,பேராலயத்தில் தமிழில் செய்தி அளித்தார். அந்நாட்களில் மட்டக்கáப்பு மக்கள் இப்போது இருப்பது போல நாகரிகம், பண்பாடு ஆகியவற்றில் முன்னேற்றமின்றி மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். கல்வி அறிவு என்பது அம்மக்களுக்கு எட்டாத கனியாக இருந்தது.மட்டக்கáப்பு மக்கள் காய்கறி விவசாயம் செய்து தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்தார்கள். விதையை தூவி, அவை விளைவதற்கு எவ்வாறு காத்திருந்தார்களோ, இதே போல் வில்லியம் ஆல்ட்டும் சுவிசேஷம் என்னும் விதையை தூவி அது பலன் தர காத்திருந்தார். அவர் தங்கியிருந்த ஓலை குடிசையிலிருந்து மேலே பார்த்தால் வானத்து நட்சத்திரங்கள் எல்லாம் அவரைப் பார்த்து சிரிக்கும் அழகிய காட்சியைப் பார்க்கலாம். அவர் வாழ்ந்த பகுதியில் கொசு தொல்லை அதிகமாக இருந்தது. ரொட்டியும், வெண்ணையும் கிடைக்காத கடினமான ஒரு இடம் அது. பால் என்பதை நினைத்து கூட அவரால் பார்க்க முடியாது. ஆனால் அவை இல்லை என்று அவர் ஒரு நாளும் கவலைப்படவில்லை. தன்னிடம் இருப்பதை நினைத்து சந்தோஷத்தோடு ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறதாக தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இங்கிலாந்தில் செல்வ செழிப்பாக வாழ்ந்தவர், இங்கு தங்க இடமின்றி தெருத்தெருவாக அழைந்து ஊழியம் செய்தார். அவர் ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராம மக்களை சந்திக்க, படகு மூலமாக தான் பயணப்பட முடியும். கிராமத்தில் ஆங்காங்கே கூடி பேசிக் கொண்டிருக்கும் வாலிபர்கள் தன்னுடன் அழைத்து வந்து அவர்கள் கல்வி கற்க உதவி செய்தார். முதன் முதலாக 5 மாணவர்களைக் கொண்டு பள்ளிக்கூடம் ஒன்றை ஆரம்பித்தார். தான் ஊழியம் செய்த 8 மாதங்களில் 8 கிராமங்களில் 8 பள்ளிக்கூடங்களை நிறுவினார். மாணவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டுமென்பதற்காக,மட்டக்களப்பில் ஒரு கல்லூரியையும் நிறுவினார். இத்தனை பெரிய சாதனையின் இரகசியம் என்னவென்றால், தேவனோடு அவர் கொண்டிருந்த உறவேயாகும். தூக்கம் என்பது அவருக்கு ஒரு நாளில் மூன்று மணி நேரங்கள் மட்டுமே, மற்ற 21 மணி நேரங்களையும் தேவனோடு உறவாடி, தேவனுடைய பணியைச் செய்வதிலேயே கழித்து வந்தார். உறங்கும் அந்த மூன்று மணி நேரமும் அவரால் நிம்மதியாக உறங்க முடியாது. கொசுக்களும், விஷப்பூச்சிகளும் அவரைக் கடித்ததில் உடலெல்லாம் வீங்கி அதிக பெலவீனமடைந்தார். 1815ம் ஆண்டு ஏப்ரல் 1ம் நாள், தன் நண்பரை அழைத்து எரேமியா 3ம் அதிகாரத்தை வாசிக்க கூறினார். வாசித்துக் கொண்டிருக்கும் போதே, 37வயதான வில்லியம் ஆல்ட்டின் உயிர் பிரிந்தது. எட்டு மாதமே அங்கு பணி செய்தாலும் அழியா சரித்திரத்தை படைத்து விட்டு சென்றார். அவர் ஆரம்பித்த பள்ளியில் பயின்ற மாணவர்களில் பலர் சமுதாயத்தில் உயர் பதவிக்கு இன்றும் வருகின்றனர். தேசத்தை ஆளும் தலைவர்கள் உருவாகி வருகிறார்கள். இவர் மூலம் மட்டக்களப்பு பகுதியில் பெரும் அசைவு உண்டானது.
இன்று நாம் எவ்வாறு வாழ்கிறோம், யாருக்காக வாழ்கின்றோம் என்று யோசித்து பார்ப்போம். வில்லியம் ஆல்ட் பின்மாற்றம் அடைவதற்கு எத்தனையோ சூழ்நிலைகள் அமைந்தது. ஆனால் முன் வைத்த காலை பின் வைக்காத படிக்கு ஆண்டவருக்காக ஊழியம் செய்து முடித்தார். நம்முடைய காலங்கள் ஆண்டவரின் கரத்தில் இருக்கின்றது. ஒரு நாள் வாழ்ந்தாலும் தலை நிமிர்ந்து வாழ்வோம். நம்முடைய திறமைகள், தாலந்துகள், நேரங்கள், பெலன் என அனைத்தையும் அவருக்காக நாம் கொடுக்கும் போது, நிச்சயம் ஆண்டவர் நம்மூலம் மகிமைப்படுவார்.
Comments
Post a Comment